அறிக்கைகள் கனிமவள தாதுக்களை எடுக்க ஒப்புதல் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..!

அறிக்கைகள் கனிமவள தாதுக்களை எடுக்க ஒப்புதல் : தமிழ்நாடு அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளிக்கிறது..!

வேல்முருகன்​

கன்னியாகுமரி மாவட்டத்தில் களியலிலை தொடங்கி ஆரல்வாய்மொழி வரை மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதிகளில் கனிமவள கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்குதொடர்ச்சி மலையை பாதுகாக்கும் வகையில் உயர்நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழுவின் அனுமதியுடன் சில குவாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது.

ஆனால், சிலர் கனிம வளங்களை தாராளமாக வெட்டிஎடுத்து, நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட லாரிகளில், 24 மணி நேரமும் கனிமவளங்கள் கேரளா கொண்டு செல்லப்படுகின்றன. அரசியல் தலையீடு, அதிகாரிகள் சிபாரிசு போன்றவற்றால் கனிமவள கொள்ளை அரங்கேறி வருவதாக கூறப்படுகிறது.

இதுஒருபுறம் இருக்க, கன்னியாகுமரி மாவட்டத்தில் எட்டு வருவாய் கிராமங்களில் 1144 ஹெக்டேர் நில பரப்பில் கனிமவள தாதுக்களை, இந்தியன் ரேர் எர்த்ஸ் லிமிடெட் மூலம் எடுத்திட மத்திய பா.ஜ.க. அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசும் ஒப்புதல் அளித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

குறிப்பாக, கீழ்மிடாலம் அ கிராமத்தில் 75 சர்வேயில் 204.6 ஹெக்டேர் நிலத்திலும், மிடாலம் ஆ கிராமத்தில் 108 சர்வேயில் 202.96 ஹெக்டேர் நிலத்திலும், இணையம் புத்தன்துறை கிராமத்தில் 91 சர்வேயில் 137.5 ஹெக்டேர் நிலத்திலும், ஏழுதேசம் அ கிராமத்தில் 23 சர்வேயில் 41.10 ஹெக்டேர் நிலத்திலும், ஏழுதேசம் ஆ கிராமத்தில் 34 சர்வேயில் 82.90 ஹெக்டேர் நிலத்திலும், கொல்லங்கோடு அ கிராமத்தில் 11 சர்வேயில் 171.77 ஹெக்டேர் நிலத்திலும், கொல்லங்கோடு ஆ கிராமத்தில் 68 சர்வேயில் 171.77 ஹெக்டேர் நிலத்திலும், தாது மணல் எடுக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதில் 80 ஹெக்டேர் புறம்போக்கு நிலமாகவும், 1064 ஹெக்டேர் நிலம் பட்டா நிலமாகவும் உள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான வீடுகளும், நீர் நிலைகளும், விளை நிலங்களும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும். 

எனவே, கனிமவள தாதுக்களை எடுக்க தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள ஒப்புதலை திரும்ப பெற தமிழ்நாடு அரசு முன் வரவேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.