மத்திய அரசு அறிவிப்பு
சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய பெட்ரோலியம் இயற்கை எரிவாயு துறை அமைச்சகம் சார்பில் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழாவையொட்டி மத்திய அரசு சார்பில் 13 முதல் 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு இந்திய பாரம்பரியம் குறித்த விநாடி வினா போட்டிகள் நடத்தப்பட உள்ளது. இதுகுறித்த அனைத்து விவரங்களும் www.akamquiz.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவோர் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறுவர். இதையடுத்து மண்டல மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் நடைபெறும். இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் ரூ.10 லட்சம் கல்வி உதவித் தொகைக்கு தகுதி பெறுவர்.
ஒட்டுமொத்தமாக ரூ.55 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இந்த விநாடி வினா போட்டிகள் 17 மொழிகளில் நடைபெற உள்ளது.
நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை இளம் தலைமுறையினரிடம் எடுத்துச் செல்வதே இந்தப் போட்டியின் நோக்கமாகும். இதுகுறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும் தெரியப்படுத்தி விநாடி வினா போட்டியில் திரளான மாணவர்கள் பங்கேற்க ஊக்குவிக்க வேண்டும்.
மாவட்ட அளவில் வெற்றி பெற்ற மாணவர்களின் விவரங்களை பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.