தற்போது நிறைய பேர் பெருந்தமனி தடிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெருந்தமனி தடிப்பு என்பது இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களின் சுவர்களின் கொழுப்புக்கள் படிந்து, இரத்த ஓட்டத்தில் இடையூறை ஏற்படுத்தும் ஒரு நிலையாகும்.
இந்நிலை தீவிரமாகும் போது, அது மாரடைப்பு அல்லது பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். இப்படி பெருந்தமனி தடிப்பு ஏற்பட காரணம் தற்போதைய ஆரோக்கியமற்ற மற்றும் கொழுப்புகள் நிறைந்த உணவுகளும், உடலுழைப்பில்லாத வாழ்க்கை முறையும் தான்.
இதன் காரணமாக நிறைய பேர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளனர். இதைத் தவிர்க்க வேண்டுமானால், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். மேலும் இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களைக் கரைத்து வெளியேற்றும் உணவுகள் மற்றும் பானங்களை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும்.
ஆயுர்வேதத்தில் இரத்தக்குழாய்களில் படிந்துள்ள கொழுப்புக்களை அகற்ற உதவும் சில பானங்கள் உள்ளன. இந்த பானங்களைக் குடித்து வந்தால், இரத்த குழாய்கள் சுத்தமாவதோடு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வரும் அபாயமும் குறையும். இப்போது அந்த பானங்கள் எவையென்பதைக் காண்போம்.
அர்ஜுனா மரப்பட்டை டீ
ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை தான் அர்ஜுனா மரப்பட்டை. இந்த மரப்பட்டைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வந்தால், இதயத்தின் செயல்பாடு மேம்படும், கொலஸ்ட்ரால் குறையும் மற்றும் இதயத்தில் உள்ள அடைப்பும் நீங்கும்.
திரிபலா டீ
ஆயுர்வேதத்தில் திரிபலா பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. திரிபலா என்பது தான்றிக்காய், நெல்லிக்காய், கடுக்காய் ஆகிய மூன்றின் கலவையாகும். இந்த திரிபலாவைக் கொண்டு டீ தயாரித்து குடித்து வரும் போது, இதயம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும், செரிமானம் மேம்படும், இதயத்திற்கு செல்லும் இரத்தக்குழாய்களில் உள்ள கொழுப்புக்கள் மற்றும் அழற்சிகள் நீங்கும்.
இஞ்சி லெமன் டீ
ஆயுர்வேதத்தில் நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் பெரும்பாலான பொருட்கள் நம் வீட்டு சமையலறையில் தான் உள்ளன. அதுவும் எலுமிச்சை மற்றும் இஞ்சி ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் டீயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், அது தமனிகளில் உள்ள அழற்சி மற்றும் கொழுப்புக்களை குறைப்பதோடு, இரத்த அழுத்தத்தையும் குறைக்கும். ஆகவே இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் இஞ்சி லெமன் டீயைக் குடித்து வாருங்கள்.
பட்டை டீ
பட்டை மற்றொரு மருத்துவ குணம் வாய்ந்த சமையலறை பொருள். இந்த பட்டை உணவிற்கு நல்ல ப்ளேவரைக் கொடுப்பதைத் தவிர, உடலுக்கு பல்வேறு நன்மைகளையும் அளிக்கின்றன. அதுவும் பட்டையைக் கொண்டு டீ தயாரித்து குடிக்கும் போது, அது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், இரத்த சர்க்கரையை பராமரிக்கும் மற்றும் கொலஸ்ட்ராலைக் குறைக்கும். முக்கியமாக இந்த டீயைக் குடித்து வந்தால் இரத்தக்குழாய்கள் சுத்தமாகும் மற்றும் இதயத்தின் ஆரோக்கியமும் மேம்படும்.
துளசி டீ
துளசி மிகவும் புனிதமான செடி. இந்த துளசி ஆயுர்வேதத்தில் பல பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. முக்கியமாக இந்த துளசியில் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. இந்த துளசியைக் கொண்டு டீ தயாரித்து தினமும் குடித்து வரும் போது, அது இரத்த குழாய்களை சுத்தம் செய்வதோடு, மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றின் அபாயத்தைக் குறைக்கும்.
பூண்டு பால்
உங்களுக்கு தினமும் பால் குடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியானால் இனிமேல் அந்த பாலில் பூண்டை தட்டிப் போட்டு வேக வைத்து, அந்த பாலைக் குடியுங்கள். இந்த பால் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். பூண்டில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி.ஆக்ஸிடன்ட்டுகள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இப்படிப்பட்ட பூண்டை பாலுடன் சேர்த்து குடிக்கும் போது, அது கொலஸ்ட்ராலைக் குறைக்கும், இரத்தக்கட்டிகள் உருவாவதைத் தடுக்கும் மற்றும் இரத்தக்குழாய்களை சுத்தம் செய்யும்.