மலையாள மெகா ஸ்டார் மம்முட்டி நடித்த ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் வெளியாகியுள்ளது. லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், மறைந்த நடிகர் பூ ராமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம் என இருமொழிகளில் வெளியான ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்துக்கு திரையரங்குகளில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ளது.
கதை தொடர்ச்சியாக ஆக்ஷன், கமர்சியல் படங்களில் கவனம் செலுத்தி வந்த மம்முட்டி, முற்றிலும் வித்தியாசமாக நடித்துள்ள திரைப்படம் தான் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. அவரது சொந்த தயாரிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். மம்முட்டியுடன் ரம்யா பாண்டியன், பூ ராமு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். ஒரு மேடை நாடகத்தை Live Location-ல் சினிமாவாக பார்ப்பது அவ்வளவு லேசான காரியம் கிடையாது. ஆனால், அந்த அனுபவத்தை நிரம்பத் தரும் படைப்பாக உருவாகியுள்ளது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’.
ஜேம்ஸ் – சுந்தரமாக மாறும் கதை வேளாங்கண்ணி வந்துவிட்டு சொந்த ஊரான கேரளாவில் உள்ள சங்கனாச்சேரி திரும்புகிறது ஒரு குழு. அதில் ஜேம்ஸ் பாத்திரத்தில் நடித்துள்ள மம்முட்டியும் தனது மனைவி, மகன், உறவினர்களுடன் பயணிக்கிறார். பழனி அருகேயுள்ள ஒரு கிராமத்தில் தாங்கள் வேனை நிறுத்த சொல்லும் ஜேம்ஸ், திடீரென அந்த ஊரில் சுந்தரம் என்ற நபராக வலம் வருகிறார். வேஷ்டி சட்டையுடன் மலையாளியாக அறிமுகமாகும் ஜேம்ஸ், எப்படி கட்டம்போட்ட லுங்கியுடன் தமிழன் சுந்தரமாக மாறுகிறார்.? ஜேம்ஸின் மனைவி, மகன் – சுந்தரத்தின் மனைவி, மகள், ஜேம்ஸுடன் வந்தவர்கள் ஒருபக்கம் என்றால்; காணாமல் போன சுந்தரம் எப்படி ஜேம்ஸ் உருவத்தில் வந்தார் என்ற வியப்பில் திணறும் கிராமத்தினர் இன்னொரு பக்கம். இப்படியாக நகர்கிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் கதை.
முதல்நாள் நண்பகல் நேரத்து உறக்கத்தில் தொடங்கும் கதை, மறுநாள் அதே நண்பகல் நேரத்து உறக்கத்துடன் முடிகிறது. இரண்டாண்டுகளுக்கு முன் காணாமல் போன சுந்தரம் உயிரோடு இருக்கிறானா இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அவன் காணாமல்போன அதேநாளில் ஜேம்ஸின் உடலில் சுந்தரத்தின் ஆன்மா மறுபிறவி எடுக்கிறது. சுந்தரத்தின் வீட்டார், கிராமத்தினர் எல்லோரும் திகைக்கிறார்கள். ‘அச்சு அசல் சுந்தரம்தான்’ எனத் நம்புகிறார்கள். ஆனால், உண்மையில் ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது என்பதை நாஸ்டாலஜியாக விண்டேஜ் ஸ்டைலில் எடுத்துள்ளார் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி.
மொத்தமாக 1.45 மணிநேரம் மட்டும் ஓடும் இந்தப் படத்தை அவ்வளவு அநாயசமாக விருந்து படைத்துள்ளது லிஜோ ஜோஸ் பெல்லிசேரி குழு. படம் முழுக்க எந்த இடத்திலும் கேமரா அசைவில்லாமல் அப்படியே Standby Mode-ல் தான் இருக்கும். மேடை நாடகத்தில் எப்படி பாத்திரங்கள் வருவதும் போவதுமாக இருக்குமோ அப்படித்தான் நண்பகல் நேரத்து மயக்கத்திலும். Frame மட்டும் சிறிதாகவும் பெரிதாகவும் விரிந்து சுருங்குகிறது, லொக்கேஷனும் மாறிக்கொண்டே இருக்கிறது. அச்சு அசலான கிராமத்தையும் அங்குள்ள பாசாங்கு இல்லாத மக்களின் அழகையும் மொத்தமாக அள்ளி வந்திருக்கிறது தேனி ஈஸ்வரின் கேமரா. இந்தப் படத்தின் ஹீரோ ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் என்றால் அது மிகையாகாது.!
அதேபோல், படத்திற்காக தனியாக பாடல்களோ பின்னணி இசையோ கிடையாது. அங்கேயும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி முற்றிலும் புதிய அனுபவத்தைக் கொடுக்கிறார். “இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி” பாடலில் தொடங்கி “வீடுவரை உறவு வீதிவரை மனைவி” பாடலில் முடிகிறது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் பின்னணி இசை. ஒரு காட்சியில் டிவியில் ஓடும் ‘வாஸிங் பவுடர் நிர்மா’ விளம்பரத்தையும் பின்னணி இசையாக வைத்து ரசிக்க வைத்துள்ளார். படம் முழுவதும் வரும் காட்சிகளும் அதன் பின்னணியும் வின்டேஜ் அழகியலில் விருந்து படைத்துள்ளது.
இதுமாதிரியான கதைக்களத்தில் இப்படியான கேரக்டர்களில் நடிப்பதால் தான், மம்முட்டி மெகா ஸ்டாராக இருக்கிறார் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டும் இல்லாமல் அவர் தான் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ படத்தின் தயாரிப்பாளரும் கூட.! ஜேம்ஸ், சுந்தரம் என இருவிதமான பாத்திரங்களுக்கும் தனது உடல்மொழியில் வித்தியாசம் காட்டி சிலிர்க்க வைத்துள்ளார். மம்முட்டி உட்பட மற்ற கலைஞர்களின் நடிப்பு, எடிட்டிங் என எல்லாமே அருமை. கண் தெரியாத பாட்டி, அவருக்காக 24 மணி நேரமும் ஓடிக்கொண்டே இருக்கும் டிவி, கடைசிக் காட்சியில் வேனின் பின்னால் ஓடும் நாய் என படத்தில் இன்னும் நிறைய இருக்கிறது. சில காட்சிகளை சரியாக புரிந்துகொண்டால் விழுந்து விழுந்து சிரிக்கலாம்.
நண்பகல் நேரத்து மயக்கம் என்ற தலைப்பைப் போன்றே, படம் மொத்தமும் தூக்க கலக்கத்தில் நகர்வதாகதான் உள்ளது. இதுமாதிரியான படங்கள் இப்படி இருப்பதுதான் அழகே. அதனால் இது எல்லோருக்குமான படம் என்ற நினைப்பில் இருந்து விலகி, பொறுமை இருந்தால் கண்டிப்பாக ரசிக்கலாம். ஒருவேளை அப்படி பொறுமையாக பார்த்துவிட்டால் அட்டகாசமான அனுபவம் கிடைக்கும். முற்றிலும் அசாத்தியமான கலை படைப்பாக உருவாகியுள்ளது ‘நண்பகல் நேரத்து மயக்கம்’. படத்தின் வழிநெடுக வரும் பழைய தமிழ்ப் படங்களின் பாடல்களும் வசனங்களும் ரசிகர்களுக்கு இன்னொரு புதிய அனுபவம். திரையரங்குகளைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான இந்தப் படம், ஓடிடி ரசிகர்களுக்கான ஸ்பெஷல் விருந்து எனலாம்.