அவசியம் பார்க்க வேண்டிய படம் ‘ஆடுகளம்’ – S.S. ராஜமௌலி பெருமிதம்

அமெரிக்காவின் புகழ்பெற்ற பிரபலமான பத்திரிகைகளில் ஒன்று தி நியூயார்க்கர். இந்த இதழுக்கு இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌலி சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் அளித்த பதில்களை இணையத்தில் மிகவும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் சர்வதேச அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து பாராட்டுகளை குவித்து வருகிறது. திரைத்துறையினருக்கு வழங்கப்படும் மிகவும் உயரிய கவுரவ விருதான ஆஸ்கர் விருதுகளின் நாமினேஷன் பட்டியலில் பல பிரிவுகளில் இடம்பெற்றுள்ளது ஆர்.ஆர்.ஆர் திரைப்படம். இந்த திரைப்படத்திற்கு இந்திய ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு எந்த அளவிற்கு இருந்ததோ அதே போன்ற வரவேற்பு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தி நியூயார்க்கர் இதழுக்காக ராஜமௌலியிடம் பலதரப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் ஒன்று அவர் தி நியூயார்க்கர் இதழ் வாசகர்கள் அவசியம் பார்க்க வேண்டும் என ஐந்து படங்களை பட்டியலிட வேண்டும் என கேட்கப்பட்டது. அதற்கு எஸ்.எஸ். ராஜமௌலி பதிலளிக்கையில் “சங்கராபரணம்”, “முன்னா பாய் எம்.பி.பி.எஸ்.”, “பண்டித் ஃகுயீன்”, “ப்ளாக் ப்ரைடே”, “ஆடுகளம்” நிச்சயம் பார்க்க வேண்டும். மேலும் அதனுடன் சேர்த்து நான் இயக்கிய ‘ஈகா’ படத்தையும் அவசியம் பார்க்க வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ், டாப்ஸி பண்ணு, முருகதாஸ், கிஷோர், நரேன் உள்ளிட்டோரின் நடிப்பில் 2011ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘ஆடுகளம்’. இப்படத்தின் நடிகர் தனுஷ் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார். அது மட்டுமின்றி 6 பிரிவுகளின் கீழ் தேசிய விருதை கைப்பற்றியது ஆடுகளம் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்ற இப்படம் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட் திரைப்படமாக வெற்றிபெற்றது.

எஸ்.எஸ். ராஜமௌலி ஐந்து இந்திய படங்களின் பட்டியலில் ஆடுகளம் திரைப்படத்தை பகிர்ந்ததை மிகவும் பெருமிதத்துடன் சோசியல் மீடியா மூலம் பகிர்ந்து வருகிறார்கள் தனுஷ் மற்றும் வெற்றிமாறன். ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் வெளியீட்டு சமயத்தில் கூட வெற்றிமாறனின் ‘அசுரன்’ திரைப்படத்தை ராஜமௌலி பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.