தமிழ்நாடு அரசு 2024 ஆம் ஆண்டை துவங்கும் போதே உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் வாயிலாக ரூ.6.6 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீட்டு விருப்பத்துடன் பெரும் தொழிற்துறை மற்றும் வேலைவாய்ப்பு வளர்ச்சி வாய்ப்புகள் உடன் துவங்கியது.இதேவேளையில் மாநிலம் முழுவதும் புது புது துறையை ஊக்குவிக்கும் சிறப்பு தொழிற்துறை பூங்கா பெரிய அளவில் பலன் அளித்து வருவது மட்டும் அல்லாமல், தமிழ்நாடு அரசு சென்னை தாண்டி மாநிலம் முழுவதும் புதிய தொழிற் பூங்கா உருவாக்கும் காரணத்தால் வேலைவாய்ப்பு அதிகரித்து மக்களின் வருமானமும் உயர்ந்து வருகிறது.இந்த மாதிரியைப் பெரிய அளவில் விரிவுபடுத்துவது மட்டும் அல்லாமல் 2030க்குள் 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய வேண்டும் என்ற முக்கியமான இலக்கை அடைய இது பெரிய அளவில் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இனி வரும் ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செய்யப்படும் முதலீடுகள் தொடர்ந்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், தமிழ்நாடு தொழில் துறை மேம்பாட்டுக் கழகம் (சிப்காட்) அடுத்த ஆறு ஆண்டுகளில் மாநிலத்தில் தொழிற் பூங்காக்களின் எண்ணிக்கையை 30 இல் இருந்து 60 ஆக இரட்டிப்பாகத் திட்டமிட்டுள்ளது என்று சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் தற்போது 28 சிப்காட் தொழிற்துறை பூங்கா உள்ளது, இது கிட்டத்தட்ட 38,538 ஏக்கரில் அமைந்துள்ளது என சிப்காட் தளத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் சிப்காட்-ன் அடுத்தகட்ட திட்டம் என்ன என்பது தான் வியக்க வைக்கும் விஷயம்.SIPCOT எவ்வளவு நிலத்தை வைத்திருக்கிறது?: இதுகுறித்து கே.செந்தில் ராஜ் கூறுகையில் தமிழ்நாடு முழுவதும் 30 தொழிற்பூங்காக்களை சிப்காட் நிர்வகித்து வருகிறது. இவை சுமார் 41,000 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளன. இதில் 3,200க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இந்த பூங்காக்களில் இயங்கி வருகின்றன எனத் தெரிவித்தார்.SIPCOT விரிவாக்கத் திட்டங்கள் என்ன?: 2021 ஆம் ஆண்டில், தமிழ்நாடு அரசு கூடுதலாக 45,000 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தி அதில் புதிய தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதில், 40,000 ஏக்கர் நிலம் கைப்பற்றக் கண்டறியப்பட்டுள்ளது. இதில் 4,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு பல்வேறு தொழில்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 36,000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் பல்வேறு நிலைகளில் நடந்து வருகின்றன.அரியலூர், ராமநாதபுரம் உள்ளிட்ட பின்தங்கிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாடு முழுவதும் 30 புதிய தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படத் திட்டமிடப்பட்டுள்ளது என்று சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.எந்த வகையான தொழிற் பூங்காக்கள் வரப்போகிறது?: தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்படும் சிப்காட் தொழிற்பூங்காக்கள் பெரிய அளவிலான பொதுவான தொழிற் பூங்காக்களாகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட தொழில் துறைக்கான தனிப்பட்ட பூங்காக்களாகவோ இருக்கலாம்.சமீப காலங்களில், உற்பத்தித் துறையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப சிப்காட் தன்னை தொடர்ந்து மெருகேற்றி வருகிறது. முன்னதாக, பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் இயங்குவதற்கு ஏதுவாக பொதுவான இன்ஜினியரிங் பூங்காக்கள் மட்டுமே நாங்கள் உருவாக்கி வந்தோம்.தற்போது, துறை சார்ந்த பூங்காக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இதில், பரிசோதனை மையங்கள், குளிர் சேமிப்பு கிடங்குகள் போன்ற பொதுவான வசதிகளை சிப்காட் அமைத்துத் தரும். மின்னணு உற்பத்தி குழுமங்கள், உணவு, லாஜிஸ்டிக்ஸ், மருத்துவ கருவிகள் மற்றும் தோல் அல்லாத காலணிகள் போன்ற துறைகளுக்கு தனிப்பட்ட முறையிலான சிப்காட் தொழிற்பூங்கா உருவாக்கப்பட்டு உள்ளது எனவும் சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் கே.செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.