பாண்டிச்சேரியில் "தி கிரேட் சோழாஸ்" என்ற பெயரில் புகைப்பட கண்காட்சி! - ஜூலை மாதம் தொடக்கம்

‘தி கிரேட் சோழாஸ்’ புகைப்பட ஓவியக் கண்காட்சி ஆரோவில்லில் உள்ள கலாகேந்திரா பாரத் நிவாஸில் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ‘தி கிரேட் சோழாஸ்’ கண்காட்சி நடைபெற உள்ளது. சோழர்களின் கட்டிடக்கலையை பறைசாற்றும் கல்லணை, தாராசுரம் ஆலயம், தஞ்சாவூரின் அடையாளமாகத் திகழும் பெரிய கோவிலின் அழகையும், அதன் கோபுரத்தின் கம்பீரத்தையும் கங்கை கொண்ட சோழபுரம் ஆலயத்தின் கம்பீரத்தையும் ஆர்டிஸ்ட் மணிவண்ணன் காட்சிப்படுத்த உள்ளார்.

சோழர்களின் வரலாறு, கட்டிடக்கலைகள் பற்றி அறிந்திருந்தாலும் அதை நேரில் சென்று பலராலும் பார்க்க முடியாது. கரிகாலன் கட்டிய கல்லணை, தஞ்சை பெரிய கோவில், நார்த்தமலை, கங்கை கொண்ட சோழபுரம், தாராசுரம் ஆலயங்களையும் கட்டிடக்கலை பற்றியும் சிற்பங்களைப் பற்றியும் நாம் புத்தகங்களில் மட்டுமே படித்திருப்போம். தனது புகைப்படங்களால் சோழர்களின் கட்டிடக்கலைகளை அனைவரின் பார்வைக்கும் கொண்டு சேர்க்கிறார் புகைப்படக்கலைஞர் ஆர்.மணிவண்ணன்.

தஞ்சாவூரைச் சேர்ந்த ஆர். மணிவண்ணன் பயண ஒளிப்படக் கலைஞர். பாரம்பரியத்தைத் தேடிச் செல்லும் அவருடைய பயணங்கள், நம்முடைய கலாச்சாரத்தின் பெருமையை அறிந்துகொள்ள உதவுகின்றன. அந்தப் பயணங்களில் அவர் எடுக்கும் ஒளிப்படங்கள், நம்முடைய கலாச்சாரத்தின் பெருமைமிகு கூறுகளை வரலாற்றில் நிலைக்கச் செய்யும் விதமாக இருக்கின்றன.

தன்னுடைய பயண அனுபவங்களை ஒளிப்படக் கண்காட்சிகளின் மூலமாக மக்களிடம் எடுத்துச் செல்வது அவருடைய வழக்கம். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தஞ்சாவூரில் ‘முகத்தின் குரல் – நாகாஸ்’ என்கிற பெயரில் அவர் ஒளிப்படக் கண்காட்சி நடத்தினார். அந்தக் கண்காட்சி நாகாலாந்து பழங்குடி மக்களின் கலாச்சாரம், எளிமையான வாழ்க்கை முறை, உணவு முறை, வண்ணமயமான உடைகள், திருவிழா கொண்டாட்டங்கள் போன்றவற்றை அறிமுகப்படுத்தின. ‘தி கிரேட் சோழாஸ்’ என்ற பெயரில் ஒரு கண்காட்சியை நாட்டின் தலைநகரான டெல்லியிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னையிலும் நடத்தியுள்ளார். சோழர்களின் வரலாறு தஞ்சாவூரின் பெருமையை சொல்லும். அந்த கண்காட்சியை பலரும் கண்டு ரசித்தனர். பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்குப் பிறகு சோழர்கள் வரலாறு பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது.

தற்போது பாண்டிச்சேரி ஆரோவில்லில் உள்ள கலாகேந்திரா பாரத் நிவாஸில் வரும் ஜூலை மாதம் 1ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை ‘தி கிரேட் சோழாஸ்’ கண்காட்சி நடைபெற உள்ளது. ஜூலை 1ஆம் தேதி கண்காட்சியின் தொடக்க விழா நடைபெற உள்ளது. சிறப்பு அழைப்பாளர்களாக கலைமாமணி சிற்பி டாக்டர் பி.வி. பிரபாகரன், பாரதியார் பல்கலைக்கூடம் பாண்டிச்சேரி. டாக்டர் பி. ராமநாதன் பிடிஎஸ் ராமநாதன் டென்ட்டல் கிளினீக் மன்னார்குடி, தஞ்சாவூர் ஆகியோர் பங்கேற்கின்றனர். இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கும் மணிவண்ணனின் ஒளிப்படங்கள் தஞ்சாவூரின் வரலாற்றையும், அதன் பெருமைமிகு கலாச்சாரத்தையும் இன்றைய தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாக உள்ளன.

தஞ்சாவூரின் அடையாளமாகத் திகழும் பெரிய கோவிலின் அழகையும், அதன் கோபுரத்தின் கம்பீரத்தையும் மணிவண்ணன் காட்சிப்படுத்தி இருக்கும் விதம் மெய்சிலிர்க்க வைக்கிறது. சொல்லப்போனால், நேரில் சென்று பார்ப்பதற்கு நிகரான அனுபவத்தை அளிக்கின்றன. பாண்டிச்சேரியில் இருந்தபடியே தஞ்சாவூரையும், சோழர்களின் கட்டிடக்கலை பற்றியும், கரிகாலன் கட்டிய கல்லணையையும் கண்டு ரசிக்க விரும்பினால் சோழர்களின் வரலாறை தெரிந்து கொள்ள நினைப்பவர்கள்ஆரோவில்லில் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்குச் சென்று வாருங்கள். சோழர்களின் காலத்துக்குச் சென்று திரும்பிய அனுபவத்தை உணரலாம். மேலும் தொடர்புக்கு 9043562566