தங்களது தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்பதால், உக்ரைனை நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
இந்நிலையில் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி, நேட்டோவில் இணைவதற்கு விருப்பம் தெரிவித்ததைத் தொடர்ந்து, உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து முக்கியமான பகுதிகளைக் கைப்பற்றியது.
எனினும், சில தோழமை நாடுகளின் உதவியுடன் சில பகுதிகளை ரஷ்யப் படையினரிடம் இருந்து மீண்டும் உக்ரைன் தன்வசப்படுத்தியது.
அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக உக்ரைனின் மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்ட அந்நாட்டின் அடிப்படைக் கட்டமைப்புகள் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வந்த நிலையில், ஆளில்லா விமானம் மூலம் கடந்த திங்கள்கிழமை அதிகாலை ரஷ்யாவின் ரியாஸன் நகரில் உள்ள விமான தளத்தில் இருந்த எரிபொருள் லாரி ஒன்று வெடித்துச் சிதறியதாக ரஷ்ய பாதுகாப்புத் துறை தெரிவித்தது.
இந்த பதற்றம் ஓய்வதற்குள், உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா பயன்படுத்தி வரும் டியு – 95, டியு – 160 குண்டுவீச்சு விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சராடோவ் பகுதியில் உள்ள ஈகிள் விமான தளத்தின் மீதும் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்ய நாட்டு ராணுவம் தெரிவித்தது.
இவை தவிர, குர்ஸ்க் விமான நிலையத்தில் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அந்த விமான நிலையத்தில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கு முழுவதுமாக எரிந்து நாசமானதாகவும் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாண ஆளுநர் ரோமன் ஸ்டாரோவாய் வெளியிட்டுள்ள டெலிகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்த தொடர் தாக்குதல்கள் ரஷ்யாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உக்ரைன் தரப்பு ரஷ்ய விமானதளங்கள் மீதான ஆளில்லா விமானத் தாக்குதல்களை இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.