பிரான்ஸ் நாட்டில் 17 வயது இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்ற சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்து கொல்லப்பட்ட சிறுவனின் தாயார் சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் டீன் ஏஜ் இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அங்கே மிகப் பெரிய வன்முறை ஏற்பட்டுள்ளது. கடந்த 4 நாட்களாகவே அங்கே போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் பல இடங்களில் வன்முறையும் ஏற்பட்டுள்ளது.
அங்கே 17 வயது இளைஞரைத் தடுத்து நிறுத்திய போலீசார், துப்பாக்கியைத் தலையில் வைத்து அவரை விசாரணை என்ற பெயரில் மிரட்டியுள்ளனர். அச்சத்தில் அந்த சிறுவன் வண்டியை எடுத்துக் கிளம்பவே அவன் மீது இந்த கொடூரத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. குறைந்த சம்பளம் கொண்ட மக்களிடம் பிரான்ஸ் போலீசார் இதுபோல அத்துமீறி நடந்து கொள்வதாக நீண்ட காலமாகப் புகார் இருக்கும் நிலையில், அனைத்து மக்களையும் இந்த டீன் ஏஜ் இளைஞரின் மரணம் வீதிக்குக் கொண்டு வந்துள்ளது. இந்த சிறுவனை போலீஸ் சுட்டுக் கொல்லும் வீடியோவும் இணையத்தில் பகீர் கிளப்புவதாக இருக்கிறது. அதில் போலீஸ் எந்தளவுக்குப் பொறுப்பே இல்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர்.
அந்த சிறுவன் நஹெல் அங்கே புலம்பெயர்ந்தோர் வசிக்கும் பாரீஸின் புறநகர்ப் பகுதியான நான்டெர்ரேயில் உள்ள பாப்லோ பிக்காசோ என்ற பகுதியில் தான் வளர்ந்தார். அவரது குடும்பம் அல்ஜீரியாவில் இருந்து பிரான்ஸ் வந்தவர்கள். முன்னாள் பிரெஞ்சு காலனியான அல்ஜீரியாவில் இருந்து அதிகப்படியான மக்கள் பிரான்ஸ் நாட்டிற்குக் குடியேறி உள்ளனர்.
இந்த அப்பாவி இளைஞரை போலீசார் சுட்டுக் கொன்றனர் என்ற தகவல் பரவியதுமே அங்கே போராட்டம் தீவிரமடைந்தது. பல்வேறு பிரபலங்களும் கூட நஹெலுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். அங்கே தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகின்றனர். பிரான்ஸ் நாட்டில் அரபு மற்றும் ஆப்பிரிக்க நாட்டு இளைஞர்களை போலீசார் எப்படி நடத்துகிறார்கள் என்பதற்கு இதுவே சாட்சி என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர். நஹெல் மிகவும் அமைதியான சிறுவன் என்றே அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
தனது மகனுக்கு நேர்ந்த கொடூரம் குறித்து அவரது தாயார் மவுனியா கூறுகையில், “எனது மகன் தான் எனக்கு பெஸ்ட் பிரண்ட். எனக்கு எல்லாமுமாக இருந்தது எனது மகன் தான். இப்போது அவரை இழந்துவிட்டேன். அவரது மரணத்திற்கு அங்கே நிலவிய சூழல் தான் காரணம். நான் ஒட்டுமொத்தமாக அனைத்து போலீசாரையும் குற்றஞ்சாட்டவில்லை.
அந்த ஒரு குறிப்பிட்ட நபர் மட்டுமே எனது மகன் மரணத்திற்குக் காரணம். அந்த ஒரு போலீசின் அடாவடி நடவடிக்கையே எனது மகன் உயிரைப் பறித்துள்ளது. இது மட்டுமின்றி போலீசாரின் நடவடிக்கையில் மாற்றம் தேவை. இதை வலியுறுத்தியே பிரான்ஸ் மக்கள் இப்போது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்” என்றார்.
நஹெலின் மரணம் பிரான்ஸை மட்டுமின்றி அல்ஜீரியாவிலும் எதிரொலித்தது. அவரிடம் இரட்டை குடியுரிமை இருந்ததா என்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் இல்லை. அதேநேரம் அல்ஜீரியா வெளியுறவு அமைச்சகம் நஹெல் அல்ஜீரியா நாட்டை சேர்ந்தவர் என்றும் அவருக்கு பிரான்ஸ் பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தனித்த சம்பவமாகப் பார்க்க முடியாது என்றும் ஒட்டுமொத்த போலீஸ் அமைப்பிற்கும் சீர்திருத்தங்கள் தேவை என்பதையே இது காட்டுவதாகவும் பிரான்ஸ் மக்கள் கொந்தளித்துள்ளனர்.