வேளாண் மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில், வேளாண் சங்கமம் 2023 ஐ முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து உரையாற்றினார். திருச்சியில் வேளாண் சங்கமத்தை (2023) துவக்கி வைத்து முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் திருச்சியில், வேளாண் சங்கமம் எனும் விவசாயக் கண்காட்சியை திறந்துவைத்தார். அப்போது அவர் கூறும்போது விவசாயிகளின் நீர்பாசனத்திற்காக நிலத்தடி நீரைப் பயன்படுத்தி, வேளாண்மை செய்ய கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கனவே 1,50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்ட நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியில் மேலும் 50,000 இலவச மின் இணைப்புகள் வழங்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் விவசாயத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு, ஊக்கத்தொகைகள் வழங்கப்பட்டு உணவுதானிய உற்பத்தியில் சாதனை படைக்கப்பட்டுள்ளதாக கூறிய முதல்வர் ஸ்டாலின், இது போன்ற கண்காட்சியின் மூலம் நவீன வேளாண் எந்திரங்கள், மதிப்பு கூட்டு தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் அடிப்படை தகவல்களை உழவர்களுக்கும், மக்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என கூறினார்.
கடந்த 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில், ஒட்டுமொத்தமாக 2 லட்சத்து 20 ஆயிரம் மின் இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டன, ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த 2 ஆண்டுகளில் 1,50,000 மின் இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். உழவர்களுக்கு வேளாண் தொழில்நுட்பமும், அதிகாரிகளுக்கு வேளாண்மையும் தெரியவேண்டும், அப்போது தான் வேளாண்மை லாபம் தரும் தொழிலாக மாறும். உழவர்கள் வேளாண்மை மட்டும் செய்யாமல் வியாபாரத்திலும் ஈடுபடவேண்டும். மேலும் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டம் பெற கடைசி நாள் ஆகஸ்ட் 15 வரை நீடிக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவின் மூலம் மகிழ்ச்சியுடன் தெரிவிப்பதாக அறிவித்தார்.