இதனால் மாசு கட்டுப்பாட்டு நடவடிக்கையில் செயல்பாட்டு நிலை 4-ஐ அமல்படுத்த டெல்லி அரசு முனைப்பு காட்டியுள்ளது. இதன்படி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. நேற்று காலையில் 480-ஐ தாண்டிய காற்றின் தரக்குறியீடு மாலையில் 500-ஐ தாண்டியது.
மாசு படர்ந்த பனிமூட்டம் காரணமாக வழக்கம்போல விமானம் மற்றும் ரெயில் போக்குவரத்தில் கடுமையான பாதிப்புகள் இருந்தன.
காற்று மாசு காரணமாக 15 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பி விடப்பட்டன. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. 50-க்கும் மேற்பட்ட ரெயில்கள் தாமதம் ஆகின. இதைப்போல சாலைப்போக்குவரத்திலும் சிக்கல் ஏற்பட்டது.
இதற்கிடையே இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு கடுமையான விசாரணையை மேற்கொண்டது. 4-ம் செயல்நிலையை மிகத்தீவிரமாக செயல்படுத்த சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது. 4-ம் செயல் நிலையை அமல்படுத்தும் விதத்தில் 10 மற்றும் பிளஸ்-2 வகுப்புகளைத் தவிர பிற வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைனில் வகுப்புகளை நடத்த டெல்லி அரசு நடவடிக்கை மேற்கொண்டு இருந்தது.
ஆனால் சுப்ரீம் கோர்ட்டு இந்த விஷயத்தில் 10 மற்றும் பிளஸ்-2 மாணவர்களின் நுரையீரல்கள் மற்றவர்களை விட வேறுபட்டதா? என கேள்வி கேட்டு பிளஸ்-2 வரை அனைவருக்கும் ஆன்லைனில்தான் வகுப்புகளை நடத்த வேண்டும், நேரடி வகுப்புகள் நடத்தக்கூடாது என்று உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரிலான நடவடிக்கைகளுக்கு இணங்குமாறு டெல்லி கவர்னர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார். இதன்படி மத்திய அரசு அலுவலகங்கள், டெல்லி அரசு அலுவலகங்களின் வேலை நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்பேரில், 10 மற்றும் பிளஸ்-2 என அனைத்து வகுப்புகளும் ஆன்லைனில்தான் நடத்தப்படும் என்றும், நேரடி வகுப்புகள் கிடையாது என்றும் நேற்று இரவு முதல்-மந்திரி அதிஷி உத்தரவிட்டாா.
இந்த விவகாரங்கள் அரசியலில் பல்வேறு பிரச்சினைகளை கிளப்பினாலும், டெல்லி மக்களின் சுகாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்குமா? என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.