கருடனை போல் காக்கும் ஆகாச கருடன் கிழங்கு! இதை வீட்டில் கட்டினால் என்ன நன்மை..!

‘கண் திருஷ்டி’ என்பது எல்லோருக்கும் மிகப்பெரிய பிரச்னையாக உள்ளது. ‘கல் அடிப்பட்டாலும் படலாம், ஆனால் கண் அடி படக்கூடாது’ என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட திருஷ்டி, விஷ ஜந்துகளை வீட்டின் பக்கம் அண்ட விடாமல் விரட்டும் சக்தி பெற்றது ஆகாச கருடன் கிழங்காகும். கிட்டத்தட்ட ஒரு கருடனை போல அது நம் வீட்டைப் பாதுகாக்கக் கூடியது. இந்த ஆகாச கருடன் கிழங்கிற்கு கொல்லன் கோவை, சாகாமூலி, மகாமூலி என்ற பெயர்களும் உண்டு. இந்தக் கிழங்கு மலைப்பகுதிகளில் தன்னிச்சையாக வளரக்கூடியதாகும். பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் வீட்டின் வாசலில் கயிற்றில் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். ஆகாச கருடன் கிழங்கு காயவே காயாது என்று கூறுவார்கள். ஏனெனில், இது காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உயிர் வாழக்கூடியதாகும். முன்பெல்லாம் கிராமப்புரத்திலே மட்டும் இதன் பயன் தெரிந்து பயன்படுத்தி வந்தார்கள். இப்போது நகர்ப்புரத்திலும் இதன் எண்ணற்ற பயன் அறிந்து உபயோகப்படுத்த ஆரம்பித்து விட்டார்கள்.

கழுகு வானத்தில் பறக்கும்போது இருக்கும் அதே தோற்றத்தை கொண்டிருக்குமாம் இந்தக் கிழங்கு. அதனாலேயே ஆகாச கருடன் கிழங்கு என்று பெயர் வந்தது. எப்படி கழுகு வானத்தில் பறக்கும்போது விஷ ஜந்துக்கள் ஓடி ஒளிந்து கொள்ளுமோ அதேபோல, ஆகாச கருடன் கிழங்கு வீட்டில் இருக்கும்போது பில்லி, சூன்யம், ஏவல், தீயசக்திகள், விஷ ஜந்துகள் என்று எதுவுமே அண்டாது என்று நம்பப்படுகிறது.

இந்தக் கிழங்கு நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். அதை ஒரு நல்ல நாளில் வாங்கி வந்து வீட்டில் நன்றாகக் கழுவிய பிறகு பூஜை அறையிலே வைத்து மஞ்சள், குங்குமம் தடவி அதை சிவப்பு, மஞ்சள் நூல்களால் கட்டி பூஜை செய்துவிட்டு, வீட்டின் வாசலிலே கட்ட வேண்டும். இதற்கு தினமும் ஊதுபத்தி, சாம்பிராணி காட்டுவது சிறந்ததாகும்.

நம் வீட்டில் கட்டும் கருடன் கிழங்கு அப்படியே இருந்தாலோ அல்லது அதிலிருந்து செடி துளிர்க்க ஆரம்பித்தாலோ வீட்டில் எந்தப் பிரச்னையும் இல்லை, நல்ல பாசிட்டிவ் எனர்ஜி இருக்கிறது என்று அர்த்தம். சில சமயங்களில் வீட்டில் கட்டிய கருடன் கிழங்கு உலர்ந்து அழுகி போகக்கூடும். அப்படி ஆவதற்குக் காரணம், வீட்டிலே நிறைய நெகட்டிவ் எனர்ஜி இருப்பதால் அதை கருடன் கிழங்கு எடுத்துக்கொள்கிறது என்று அர்த்தம். எனவே, ஒருமுறை கிழங்கு அழுகிப்போனதும் கட்டுவதை விடாமல் தொடர்ந்து கருடன் கிழங்கை வாங்கி வீட்டில் கட்டவும். அப்போதுதான் அது வீட்டில் உள்ள நெகட்டிவ் எனர்ஜியை முழுமையாக எடுத்துக்கொள்ளும்.

அதுமட்டுமில்லாமல், ஏதேனும் விஷ ஜந்துக்கள் கடித்து விட்டால் ஆகாச கருடன் கிழங்கை சாப்பிடக் கொடுப்பார்களாம். இதனால் கடிப்பட்டவருக்கு வாந்தி வந்து விஷம் உடலை விட்டு வெளியேறி விடும் என்று சொல்லப்படுகிறது. ஆகாச கருடன் கிழங்கு மூலிகையாகவும் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். சீதபேதி போன்றவற்றிற்கும் நாய், பூனை கடிக்கும் அருமருந்தாக இருக்கிறது.

இத்தகைய அதிசயம் மிகுந்த ஆகாச கருடன் கிழங்கை சித்தர்கள் மிகவும் முக்கியமான மூலிகையாக கருதினார்கள். எந்தக் கொடிய நோயையும் கொல்லக்கூடியதால் இதை, ‘கொல்லன் கோவை’ என்றும் அழைப்பார்கள். நம்மைக் காக்க தன்னைத்தானே அழித்துக்கொள்ளும். அதனாலே சித்தர்கள் இக்கிழங்கை மகாமூலி என்று அழைக்கிறார்கள்.