நினைத்து பார்த்ததை விட அருமை படம் 'அமரன்' - ரஜினிகாந்த் பாராட்டு

காஷ்மீர் பயங்கரவாதிகளுடனான மோதலில் வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள ‘அமரன்’ படம், தீபாவளி பண்டிகையில் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அனைத்து தரப்பினரின் பாராட்டையும் பெற்று வருகிறது.

இந்தநிலையில் ‘அமரன்’ படத்தை பார்த்த ரஜினிகாந்த், அதன் படக்குழுவினரை நேற்று தனது இல்லத்துக்கு அழைத்து பாராட்டினார். அப்போது ரஜினிகாந்த் கூறியதாவது:-

‘அமரன்’ படம் பார்த்தேன். இந்த படத்தை தயாரித்த கமல்ஹாசனை எவ்வளவு பாராட்டினாலும் அது குறைவு தான். எத்தனையோ ராணுவ படம் வெளியாகி இருக்கிறது. ஆனால் நினைத்து பார்த்ததை விட அருமையாக ராஜ்குமார் பெரியசாமி படத்தை இயக்கியுள்ளார்.

சிவகார்த்திகேயன், மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்திருக்கிறார். இது அவரது திரைப்பயணத்திலேயே சிறப்பான படம். அதேபோல சாய் பல்லவியும் அசத்தியுள்ளார். இந்த படத்தை பார்த்து முடிக்கும்போது அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.

என் 2-வது அண்ணன் நாகேஷ்வர ராவ், 14 வருடம் ராணுவத்தில் இருந்தார். சீனா போரில் முதுகெலும்பில் குண்டு பாய்ந்து, பின்னர் ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றார். எனவே தனிப்பட்ட முறையில் என்னை தாக்கிய படம் இது.

இது எல்லோரும் பார்க்க வேண்டிய படம். ராணுவ வீரர்களின் கஷ்டத்தை அனைவருமே உணரவேண்டும். ராணுவ வீரர்களை சீருடையில் பார்த்தாலே ஒரு மிடுக்கு வரும். இந்தியன் என்ற உணர்வு, சிலிர்ப்பு நமக்குள் வரும். இவ்வாறு அவர் கூறினார்.