சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்தை முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர், தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ,21 கோடி ஒதுக்கீடு செய்து அவர் உத்தரவிட்டார்.
கடந்த அ தி மு க ஆட்சியின்போது ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தமிழகம் முழுவதும் நகர்ப்பகுதியில் அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.
இங்கு இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம் போன்றவை 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது.
தி மு க ஆட்சி பொறுப்பேற்ற பின்பும், அம்மா உணவகம் தொடர்ந்து சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 2013-ம் ஆண்டு இந்த திட்டம் தொடங்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் தற்போது வரை அதே விலையிலே உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியில் மட்டும் 388 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த உணவகங்கள் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பயன் அடைந்து வருகின்றனர்.
சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் அம்மா உணவகங்களுக்கு தேவைப்படும் அரிசி, கோதுமை ஆகியவை மானிய விலையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் மூலமாகவும், மளிகை பொருட்கள், காய்கறிகள், சமையல் கியாஸ் போன்றவை திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவு சங்கத்தின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், தயிர் ஆவின் நிறுவனத்திடம் பெறப்படுகிறது. இந்த உணவகங்களில் பணிபுரியும் மகளிர் சுயஉதவி குழு உறுப்பினர்களுக்கு நாள் ஒன்றுக்கு 300 ரூபாய் ஊதியமாக அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கடந்த 3 ஆண்டுகளில் 148.4 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.
தி மு க ஆட்சி பொறுப்பேற்றது முதல் இதுவரை சென்னை மாநகராட்சியால் சுமார் 400 கோடி ரூபாய், அரிசி மற்றும் கோதுமைக்கான தமிழ்நாடு அரசின் மானியமாக 69 கோடி ரூபாய் என மொத்தம் 469 கோடி ரூபாய் இத்திட்டத்துக்காக செலவிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில் சென்னை மாநகராட்சி 122-வது வார்டில் உள்ள தேனாம்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகத்தை முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அந்த உணவகம் செயல்படும் முறை, வழங்கப்படும் உணவின் தரம், சுவை ஆகியவற்றை பரிசோதனை செய்ததோடு, அங்கு உணவருந்த வந்த பயனாளிகளோடும் உரையாடினார்.
தமிழகத்தில் உள்ள பல்வேறு அம்மா உணவகங்களில் உள்ள பாத்திரங்கள் மற்றும் சமையல் கருவிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து இவற்றை மாற்றி புதிய பாத்திரங்கள் மற்றும் கருவிகளை 7 கோடி ரூபாய் செலவில் வழங்க ஆணையிட்டார்.
மேலும், 14 கோடி ரூபாய் செலவில் இந்த உணவகங்களை புனரமைத்திடவும் உத்தரவிட்டார்.
மேலும், தங்கள் பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களுக்கு அவ்வப்போது நேரில் சென்று ஆய்வு செய்து தேவையான உதவிகளை செய்து தர வேண்டும் என அமைச்சர்கள், எம் எல் ஏக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மு க ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இந்த ஆய்வின் போது பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.குமரகுருபரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதற்கிடையே முதல்-அமைச்சர் மு க ஸ்டாலின் சமூக வலைதள பதிவில்,‘தி மு க ஆட்சி பொறுப்பேற்றதும் அம்மா உணவகங்களை மூடிவிடுவார்கள் என புரளிகளை கிளப்பியது ஒரு கூட்டம். அவர்களது தீய எண்ணங்களுக்கு இடம் அளிக்காமல், கடந்த 3 ஆண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு ஒரு லட்சத்துக்கும் அதிகமானோரின் பசியாற்றும் நடவடிக்கைகளை தி மு க அரசு மேற்கொண்டிருக்கிறது’ என கூறி உள்ளார்.