வானொலி வழியாக ஒலிபரப்பாகும் மனதின் குரல் நிகழ்ச்சியின் 99வது அத்தியாயத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், கிரிக்கெட் வீரர் சதம் விளாசுவதற்கு முன்பு 99 ரன் எடுத்திருப்பதை போன்று உணர்வதாகவும், தான் பதற்றத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். 100வது மனதின் குரல் நிகழ்ச்சிக்காக அனைவரும் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
நாட்டில் 2013ஆம் ஆண்டில் உடல் உறுப்பு தானம் 5 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 2022ஆம் ஆண்டில் 15 ஆயிரம் ஆக உயர்ந்து உள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்தார். ஒருவர் உடல் உறுப்பு தானம் செய்தவன் மூலம் 8 முதல் 9 நபர்கள் புதிதாக வாழ்க்கை பெறுவார்கள் என்று கூறிய பிரதமர், உடல் உறுப்பு தானம் செய்வதற்கு நாட்டில் ஒரே மாதிரியான கொள்கையை வகுப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறினார்.
மாநிலங்களின் குடியிருப்பு என்ற நிபந்தனையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நோயாளிகள் எந்த மாநிலத்திற்கும் சென்று உறுப்புகளைப் பெறுவதற்கு இது உதவும் என்றும் கூறினார். பண்டிகை காலங்கள் நெருங்கும் நிலையில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதாகவும், மக்கள் விழிப்புடன் இருக்கவும் பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் ஆற்றலை வெளிப்படுத்தி வருவதாகவும், தி எலிஃபன்ட் விஸ்பரரஸ் என்ற ஆவணப்படத்திற்காக இயக்குநர் கார்த்திகி கொன்சால்வ்ஸ் மற்றும் தயாரிப்பாளர் குனீத் மோங்கா ஆகியோர் ஆஸ்கர் விருது பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், நாம் ஒருவரையொருவர் தெரிந்துகொள்ளும்போதும் ஒற்றுமை உணர்வு வலுவடைவதாகக் குறிப்பிட்ட பிரதமர் மோடி, சௌராஷ்டிரா-தமிழ் சங்கமம் என்ற நிகழ்வு அடுத்த மாதம் 17 முதல் 30ஆம் தேதி வரை குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளதாகவும் அறிவித்தார்.