அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படப்பிடிப்பில் கலை இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

விடாமுயற்சி திரைப்படத்தின் கலை இயக்குனர் மிலன் அஜர்பைஜானில் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் இன்று காலமானார். மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் நாட்டிற்கு மிலன் சென்ற நிலையில், இன்று காலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில், பாதி வழியிலேயே உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 54.

அலைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் விடா முயற்சி திரைப்படத்தின் ஷூட்டிங் தற்போது அசர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பின்போது மிலனின் உயிர் பிரிந்துள்ளது. அஜித் நடிப்பில் முன்பு வெளியான பில்லா, வீரம், வேதாளம், துணிவு உள்ளிட்ட படங்களிலும் மிலன் கலை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.