அரவிந்த் கெஜ்ரிவால் ராஜினாமா முடிவு? இதுதான் காரணம்…
புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலை கடந்த மார்ச் 21ஆம் தேதி கைது செய்தது. திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கெஜ்ரிவாலை பின்னர் சிபிஐயும் கைது செய்தது.
அமலாக்கத்துறை வழக்கில் ஜூலை மாதமே ஜாமீன் கிடைத்த நிலையில், சிபிஐ வழக்கில் செப்டம்பர் 13ஆம் தேதி ஜாமீன் கிடைத்தது. இதையடுத்து, கெஜ்ரிவால் சிறையில் இருந்து வெளிவந்தார். இதற்கிடையே தேர்தல் பிரசாரத்திற்காகவும் இடைக்கால ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாகக் குற்றம் சாட்டப்பட்ட 40 நபர்களில் அமன்தீப் சிங் தால் மட்டுமே சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்களிடம் பேசிய கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.
கட்சித் தொண்டர்களிடம் பேச ஆரம்பித்தபோது, அரவிந்த் கேஜ்ரிவால் “நான் சிறையில் இருந்தபோது எனக்காக பிரார்த்தனை செய்த லட்சக்கணக்கான மக்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். எனக்கு சிறையில் படிக்க நிறைய நேரம் கிடைத்தது. இந்த நேரத்தில் நான் ராமாயணம், மகாபாரதம், பகவத் கீதையை படித்தேன். பகத் சிங்கின் சிறை அனுபவம் குறித்த புத்தகங்களையும் படித்தேன்,” என்று கூறினார்.
மேலும் பேசிய அவர் டெல்லியின் துணைநிலை ஆளுநர் தன்னை மிரட்டியதாகக் குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்தார். வினய் குமார் சக்ஷேனா பற்றிப் பேசுகையில், “நான் இல்லாத நேரத்தில் அதிஷி என்னுடைய இடத்தில் இருந்து கொடியேற்ற வேண்டும் என்று நான் துணைநிலை ஆளுநருக்குக் கடிதம் எழுதினேன். அதற்குக் கிடைத்த பதிலில், இனி ஒருமுறை நீ எனக்கு கடிதம் எழுதினால் உன்னுடைய குடும்பத்தை உன்னால் பார்க்கவே முடியாது என்று கூறப்பட்டிருந்தது,” என்று தெரிவித்தார் அரவிந்த்.
அதிஷி மர்லேனா ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய உறுப்பினர் ஆவார். அவர் தற்போது டெல்லி அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வருகிறார்.
மேலும் தனது உரையின்போது, “என்னை ஜெயிலுக்கு அனுப்புவதன் மூலம் ஆம் ஆத்மி கட்சியை உடைத்து என்னைப் பயமுறுத்தலாம் என்பதே என் கைதுக்குப் பின்னால் இருக்கும் நோக்கம்” என்று மத்திய அரசைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.
“நான் சிறையில் இருந்து என்னுடைய பதவியை ராஜினாமா செய்ய விரும்பவில்லை. எனக்கு இந்த நாட்டின் ஜனநாயத்தின் பலம் தேவைப்பட்டது. சிறையில் இருந்தும் ஆட்சி நடத்த முடியும் என்பதை நான் நிரூபித்துவிட்டேன்,” என்றும் அவர் குறிப்பிட்டார்.
“மக்கள் ஒரு முடிவெடுக்கும் வரை இனி நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்,” என்று கட்சித் தொண்டர்களிடம் அவர் பேசியுள்ளார்.
“நான் மக்களிடம் செல்கிறேன். ஒவ்வொரு தெருவாக, ஒவ்வொரு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கிறேன். அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு நேர்மையான மனிதர் என்று மக்கள் தீர்ப்பு வழங்கும் வரை நான் முதல்வர் இருக்கையில் அமர மாட்டேன்,” என்று அவர் கூறியுள்ளார்.