8-வது பெண்கள் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி பீகாரில் உள்ள ராஜ்கிர் நகரில் நடந்து வருகிறது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் இந்தியா (5 வெற்றி) முதலிடமும், சீனா (4 வெற்றி, ஒரு தோல்வி) 2-வது இடமும், மலேசியா (2 வெற்றி, 3 தோல்வி) 3-வது இடமும், ஜப்பான் (ஒரு வெற்றி, 2 டிரா, 2 தோல்வி) 4-வது இடமும் பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறின.
தென்கொரியா (ஒரு வெற்றி, ஒரு டிரா, 3 தோல்வி) 5-வது இடமும், தாய்லாந்து (ஒரு டிரா, 4 தோல்வி) கடைசி இடமும் பெற்று அரைஇறுதி வாய்ப்பை இழந்தன.
இந்த நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 4.45 மணிக்கு நடைபெறும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, 11-வது இடத்தில் உள்ள ஜப்பானை எதிர்கொள்கிறது.
சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி லீக்கில் தென்கொரியாவுக்கு (3-2) எதிரான ஆட்டத்தில் மட்டுமே போராடி வென்றது. ஜப்பான் (3-0) உள்பட மற்ற அணிகளை துவம்சம் செய்தது. இதுவரை 26 கோல்கள் அடித்துள்ள இந்தியா 2 கோல் மட்டுமே வாங்கியுள்ளது. கடைசி லீக்கில் வீழ்த்திய ஜப்பானை ஒருநாள் இடைவெளியில் மீண்டும் சந்திக்கிறது.
மிசுகி மொரிடா தலைமையிலான ஜப்பான் அணி இந்த தொடரில் மலேசியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மட்டுமே வெற்றி கண்டிருந்தது. மற்ற ஆட்டங்களில் எதிர்பார்த்தபடி ஜொலிக்கவில்லை. இருப்பினும் முக்கியமான இந்த ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேற ஜப்பான் எல்லா வகையிலும் போராடும். அதேநேரத்தில் சொந்தமண்ணில் தங்களது ஆதிக்கத்தையும், வெற்றி உத்வேகத்தையும் தொடரச் செய்து இறுதிபோட்டிக்குள் அடியெடுத்து வைக்க இந்திய அணி வரிந்து கட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.