'ஜவான்' படத்தில் முதல் பாடலுக்கே கோடிக் கணக்கில் செலவு செய்த அட்லி!

அட்லி இயக்கத்தில் நடிகர்கள் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘ஜவான்’ திரைப்படம் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வெளியாக இருக்கிறது.
படத்தின் ப்ரிவியூ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வரும் அதே வேளையில் படத்தில் இருந்து முதல் சிங்கிளான ‘ஜிண்டா பண்டா’ வெளியாக இருக்கிறது. இந்தப் பாடல் மிகப் பிரம்மாண்டமான முறையில் சென்னையில் ஐந்து நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, ஹைதராபாத், பெங்களூரு, மதுரை, மும்பை ஆகிய ஊர்களில் இருந்து ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் இந்தப் பாடலில் நடனமாடி உள்ளனர்.

இந்தப் பாடல் மட்டுமே சுமார் 15 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
‘அரபிக்குத்து’, ‘வாத்தி கம்மிங்’ போல இந்தப் பாடலையும் ரெக்கார்ட் பிரேக்கிங் ஹிட்டாக அனிருத் இசையமைத்து இருக்கிறார் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது. கண்ணைக் கவரும் விஷூவலுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் பாடலுக்கு ஷோபி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.