1971-ல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் வெற்றி பெற்ற பின், வங்காளதேசம் தனி நாடாக உருவானது. இந்த போரில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலையில் 30 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தது.
2018-ல் நடந்த மாணவர்களின் போராட்டத்தை தொடர்ந்து இந்த இடஒதுக்கீடு முறை நிறுத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில், 30 சதவீத இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த போவதாக அந்நாட்டு அரசு சமீபத்தில் அறிவித்தது.
இதை எதிர்த்து மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். அரசுக்கு எதிராக போராடும் மாணவர்கள் மீது ஆளும் அவாமி லீக் கட்சியின் மாணவர் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.
அதே போல் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக மாணவர்களின் போராட்டம் நாடு முழுவதும் பெரும் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் மாநிலத்தின் அரசு தொலைக்காட்சி நிலையத்துக்கு தீவைத்ததை தொடர்ந்து நிலைமை மிகவும் மோசமடைந்தது.
அதேபோல் தலைநகர் டாக்காவின் வடக்கே அமைந்துள்ள நர்சிங்டி நகரில் உள்ள சிறைச்சாலைக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததை தொடர்ந்து, சுமார் 800 கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.
இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, செல்போன் இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. நிலைமையை சமாளிப்பதற்காக ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 16-ம் தேதியில் இருந்து நடந்து வரும் வன்முறையில் இதுவரை 103 பேர் பலியானதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் வங்காளதேசத்தில் நிலவும் அசாதாரண சூழல் காரணமாக அங்கு படித்து வரும் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாயகம் திரும்பி வருகின்றனர்.
இதுவரை சுமார் 1,000 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக நாடு திரும்பி உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை, 778 இந்திய மாணவர்கள் பல்வேறு தரைவழிகள் வாயிலாக இந்தியா திரும்பியுள்ளனர். மேலும், டாக்கா மற்றும் சிட்டகாங் விமான நிலையங்கள் வழியாக வழக்கமான விமான சேவைகள் மூலம் சுமார் 200 மாணவர்கள் வீடு திரும்பியுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
====
Bangladesh Violence, Death, Students, Reservation, Government Jobs, Succession, Protesters, Internet Shutdown, Indian Students, வங்காள தேச வன்முறை, இறப்பு, மாணவர்கள், இட ஒதுக்கீடு, அரசு வேலை, வாரிசு, போராட்டக்காரர்கள், இணைய சேவை முடக்கம், இந்திய மாணவர்கள்