குடியுரிமை திருத்த சட்டம் காரணமாக முஸ்லீம் அகதிகள் பாதிக்கப்படலாம் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக மத்திய அரசு விரிவான விளக்கத்தை கொடுத்துள்ளது. மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவர் ஒப்புதல் கிடைத்த பிறகும், இது தொடர்பாக மத்திய அரசு எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையே சுமார் 5 ஆண்டுகளுக்கு பிறகு குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்துவதாக மத்திய அரசு அறிவித்தது. இருப்பினும், இதற்கு எதிர்க்கட்சிகள் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளன.
மத அடிப்படையில் குடியுரிமையை வழங்கக்கூடாது என்பதே எதிர்க்கட்சிகள் வாதமாக இருக்கிறது. இந்தச் சட்டம் பாரபட்சமானது என்றும் லோக்சபா தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு இது அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டது ஏன் என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகிறது. இதற்கிடையே இந்த சிஏஏ சட்டம் இந்திய முஸ்லிம்களின் சுதந்திரம் மற்றும் வாய்ப்பை ஒருபோதும் குறைக்காது என்று மத்திய அரசு மீண்டும் விளக்கமளித்துள்ளது. உலகில் எந்த நாட்டை சேர்ந்த முஸ்லிம்களும் இந்தியாவில் குடியுரிமை பெறுவதை இந்தச் சட்டம் தடை செய்யவில்லை என்றும் மத்திய அரசு கூறுகிறது.
கடந்த 2014 டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா வந்த ஆவணமற்ற இந்துக்கள், ஜெயின் மதத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள் மற்றும் பார்சிகளுக்கு குடியுரிமை வழங்குவதே இந்த சட்டமாகும். அந்த நாடுகளை சேர்ந்த அகதிகள் 5 ஆண்டுகள் இருந்தாலே போதும் அவர்களா் குடியுரிமை பெற முடியும் என்பதே விதியாகும்.
முஸ்லீம்கள் குடியுரிமை பெறுவதை தடுக்காது: இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் கூறுகையில், “உலகில் எந்த நாட்டை சேர்ந்த முஸ்லீம்களும் குடியுரிமைச் சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் இந்தியக் குடியுரிமையைப் பெறலாம். அது வழக்கம் போல தொடரவே செய்யும். மேலும், இந்தச் சட்டம், அந்த இஸ்லாமிய நாடுகளில் (பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான்) துன்புறுத்தப்படும் எந்த முஸ்லீமும், தற்போதுள்ள சட்டங்களின் கீழ் இந்தியக் குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதைத் தடுக்காது.
சிஏஏ குடியுரிமை சட்டங்களை ரத்து செய்யாது. எனவே, எந்தவொரு வெளிநாட்டிலிருந்தும் குடியேறிய முஸ்லீம்கள் உட்பட யாராக இருந்தாலும்… அவர்கள் இந்தியக் குடிமகனாக இருக்க விரும்பினால் தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விண்ணப்பிக்கலாம்.. இந்தச் சட்டத்தால் இந்திய முஸ்லீம்கள் கவலைப்படத் தேவையில்லை, ஏனெனில் சிஏஏ அவர்களின் குடியுரிமையைப் பாதிக்காது. தற்போது நமது நாட்டில் உள்ள 18 கோடி இந்திய முஸ்லிம்களையும் அவர்களின் சம உரிமையையும் இது எந்த விதத்திலும் பாதிக்காது” என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது இந்த 3 நாடுகள் மட்டுமின்றி மற்ற நாடுகளில் இருக்கும் இஸ்லாமியர்களும் இந்திய குடியுரிமையை பெற முடியும். அவர்களுக்கு ஏற்கனவே இருக்கும் சட்டத்தின் கீழ் குடியுரிமை வழங்கப்படும். இந்தச் சட்டம் என்பது மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக இந்த 3 நாடுகளில் இருந்து வந்த அகதிகளுக்க மட்டுமே பொருந்தும் என்பதே விளக்கமாக இருக்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தும் முடிவுக்கு எதிராக நாட்டின் பல பகுதிகளில் போராட்டங்கள் ஆரம்பித்துள்ளன. ஏனென்றால் இந்தச் சட்டம் இந்திய குடியுரிமையைப் பறிக்கலாம் என்று சிலர் அஞ்சுகின்றனர். இதற்கும் மத்திய அரசு விளக்கம் கொடுத்துள்ளது. அதாவது, “இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின்படி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் துன்புறுத்தலுக்கு உள்ளாகும் சிறுபான்மையினருக்கு நல்ல எதிர்காலத்திற்காக இந்திய குடியுரிமையைப் பெற உதவவதே இந்த சட்டத்தின் நோக்கம்.
அதேநேரம் ஏற்கனவே இந்திய குடியுரிமை பெற்றவர்கள்.. குடியுரிமையை நிரூபிக்க எந்தவொரு ஆவணத்தையும் சமர்ப்பிக்கும்படி தேவையில்லை. மேலும், இந்த சிஏஏ சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்துவது குறித்து எதுவும் சொல்லவில்லை.. எனவே, இந்த சிஏஏ சட்டம் நமது நாட்டில் உள்ள முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிரானது என்று முஸ்லிம்கள் எதிரானது என்று சொல்வது உண்மை இல்லை” என்று அதில் கூறப்பட்டுள்ளது.