கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.300 கோடியில் கெம்ப்ளாஸ்ட் சன்மாரின் புதிய ஆலை!

கெம்ப்ளாஸ்ட் சன்மார் நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகையில் ரூ.300 கோடி முதலீட்டில் சிறப்பு வகை ரசாயனங்கள் தயாரிக்கும் உற்பத்தி மையத்தை தொடங்கி உள்ளது. இதை தொடங்கி வைத்த அந்நிறுவனத்தின் தலைவர் விஜய் சங்கர் கூறியதாவது:

வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், சர்வதேச அளவிலான பாதுகாப்பு தரத்தின் அடிப்படையில் இந்த உற்பத்தி மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன தானியங்கி இயந்திரங்களுடனும் தண்ணீர் பயன்பாட்டை குறைக்கும் வகையிலும் இந்த தொழிற்சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது, எங்களுடைய திட்டப் பொறியாளர்களின் கடந்த 12 மாத கால அயராத உழைப்பின் மூலம் சாத்தியமாகியுள்ளது.
இந்த தொழிற்சாலை, சர்வதேச வேளாண் வேதியியலுக்கான உள்ளடக்கங்களை தயாரிக்கும் வகையில் நிறுவனத்தின் தலைசிறந்த வேதியியல் வல்லுநர்கள் மற்றும் பொறியாளர்களால் இயக்கப்படுகிறது.

மேலும், இந்த முதல் தொகுப்பில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கும் பல்வேறு வகையான வேதியியல் செயல்முறைகளை கையாள்வதற்கும் கணிசமாக முதலீடு செய்துள்ளோம். இவ்வாறு நிறுவன தலைவர் விஜய் சங்கர் தெரிவித்தார்.