சைலன்ட்டானது சென்னை சென்ட்ரல்! டிஜிட்டலில் வரும் அறிவிப்பு…

தமிழகத்தில் முதன் முறையாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நேற்று முதல், சைலன்ட்டாக மாறியுள்ளது. ரயில்களின் புறப்பாடு, வருகை குறித்த தகவல்கள் ஒலி பெருக்கி வாயிலாக அறிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் திரையில் மட்டுமே தகவல்கள் வெளியாகின்றன.

சென்னையில் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலைங்கள், மிகப் பெரிய ரயில் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன. சென்னை சென்ட்ரலில் இருந்து, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டில்லி உட்பட, பல்வேறு மாநிலங்களுகக்கு, அதிக அளவில் ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில் நிலையத்திற்கு தினமும், ஆயிரக்கணக்கான பயணியர் வந்து செல்கின்றனர்.

ரயில் நிலையத்திற்கு வரும் பயணியருக்காக, புறப்படும் ரயில்களின் எண், சேரும் இடம், புறப்படும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற தகவல்கள், ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்படும். வெளியூர்களில் இருந்து வரும் ரயில்கள், புறப்பட்ட ஊர், ரயில் எண், வந்து சேரும் நேரம் மற்றும் நடைமேடை எண் போன்ற விபரங்களும் ஒலிபெருக்கி வாயிலாக அறிவிக்கப்படும்.

இதன்படி, ரயில்கள் புறப்பாடு, வருகை, நடைமேடை போன்ற விபரங்கள், டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்படும். ஒலிபெருக்கி வாயிலாக இனி அறிவிக்கப்படாது.

விமான நிலையங்கள் போல, நிமிடத்திற்கு நிமிடம் ரயில்கள் குறித்த விபரங்கள், டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பாகும். அதைப் பார்த்து, பயணியர் ரயில் விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நடைமுறை நேற்று (26.02.2023) முதல் துவங்கியது.

இதுகுறித்து, ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:

சென்னை சென்ட்ரலில் சோதனை ரீதியாக, அறிவிப்புகளை ஒலிபெருக்கி வாயிலாக அறிவிப்பது நிறுத்தப்பட்டு, டிஜிட்டல் பலகையில் மட்டும் தகவல் தரும் நடைமுறை நேற்று துவங்கியது.

இதனால், ரயில்கள் குறித்த விபரங்களை பயணியர் தெரிந்து கொள்ள, விசாரணை மையங்கள் செயல்படும். பயணியரின் வரவேற்புக்கு ஏற்ப இந்த டிஜிட்டல் திரை நிரந்தரமாக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.