சினிமா விருதுகள் விரைவில் வழங்கப்படும்: 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் அமைச்சர் உறுதி

சென்னை: செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், நேற்று (15.12.2022) சென்னை. ராயப்பேட்டை, பி.வி.ஆர். – சத்யம் சினிமா திரையரங்கில், இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் (Indo Cine Appreciation Foundation) சார்பில் நடைபெற்ற “20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவினை” (Chennai International Film Festival) தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

அவர் பேசியதாவது,

“கொரோனா என்கின்ற பேரிடர் காரணத்தினால் கடந்த ஆண்டு மிகச் சுருக்கமாகவும், எளிமையாகவும் இந்த நிகழ்ச்சியை நடத்த வேண்டிய ஒரு சூழ்நிலை உருவானது. ஆனால், இந்த ஆண்டோ அனைத்து விழாக்களும் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சி தொடங்கி தொடர்ந்து 8 நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது.

இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகம் (Indo Cini Appreciation Foundation) ஒரு பதிவு செய்யப்பட்ட லாப நோக்கமற்ற அமைப்பாகும். சினிமாவை ஊக்குவிப்பதற்காக உலகத்தரம் வாய்ந்த பல்வேறு நாடுகளில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் விருதுகளை வென்ற சிறந்த திரைப்படங்கள் இந்த அமைப்பின் மூலம் சென்னையில் திரையிடப்படுகிறது. இந்த அமைப்பில் திரைப்பட இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள், விஷுவல் கம்யூனிகேசன் மாணவர்கள் மற்றும் திரைப்பட ஆர்வலர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட பதிவுபெற்ற உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ்நாடு அரசின் ஆதரவுடன் 2003ஆம் ஆண்டு முதல் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை இந்நிறுவனம் நடத்தி வருகிறது. மேலும், 2008ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் சென்னை சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 6வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 17.12.2008 அன்று நடைபெற்ற போது இதற்கென தமிழ்நாடு அரசின் நிதியுதவி ரூ.25,00.000/- வழங்கப்பட்டது. மேலும் தொடர்ந்து, 2012ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு வரை சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.50,00,000/- தமிழ்நாடு அரசின் நிதியாக வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும், 2018ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.75,00,000/- நிதியுதவியாக தமிழ்நாடு அரசு மூலம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைபெறும் 20வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவிற்கு ரூ.75,00,000/- தமிழ்நாடு முதலமைச்சரின் உத்தரவின் அடிப்படையில் செய்தித் துறையின் சார்பாக வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் வழங்கவேண்டிய தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 6 ஆண்டுகளுக்கான விருதுகள் வழங்கப்பட்டது. 2015ஆம் ஆண்டிற்கான விருது அரசாணையாக வெளியிடப்பட்டிருக்கிறது. மேலும், 2016, 2017, 2018, 2019, 2020, 2021 ஆகிய ஆண்டுகளுக்கான விருதுகளை தேர்வு செய்வதற்கான குழு அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான தேர்வு நடைபெற்று கலைஞர்களுக்கான அந்த விருதுகளும் திரைப்படத் துறையிலும், சின்னத்திரை சார்ந்திருப்பவர்களுக்கும், தமிழ்நாடு அரசின் Film City சார்ந்த மாணவர்களுக்கும் வழங்கப்படும்.

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரைப்படக் கல்லூரி மாணவர்கள், திரைப்பட ஆர்வலர்கள், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்றுள்ளதை எண்ணி மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். இந்நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறவேண்டும். தமிழக அரசின் ஆதரவு அனைத்து வகையிலும் தொடர்ந்து நிச்சயமாக இருக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்து, இந்த நிகழ்ச்சிக்கு வாழ்த்துக்கூறியும், வாய்ப்புக்கு நன்றி தெரிவித்தும் நிறைவு செய்கிறேன்.” என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அரசுச் செயலாளர் மரு.ரா.செல்வராஜ், இந்தியத் திரைப்படத் திறனாய்வுக் கழகத்தின் தலைவர் சிவன் கண்ணன், துணைத் தலைவர் பி.ராமகிருஷ்ணன், பொதுச் செயலாளர் இ.தங்கராஜ், திரைப்பட நடிகை பூர்ணிமா பாக்கியராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.