மருத்துவ படிப்புகளுக்கான ‘நீட்’ தேர்வை ஆன்லைனில் நடத்துவது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கு ‘நீட்’ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.
கடந்த ஆண்டு நடத்தப்பட்ட நீட் தேர்வு, ஏராளமான முறைகேடு புகார்களில் சிக்கியது. வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியது, ஆள்மாறாட்டம் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.
இவை பற்றி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், நீட் தேர்வு நடத்தும் தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் நிபுணர் குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. அக்குழு, நீட் தேர்வு தொடர்பான தனது பரிந்துரைகளை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
தற்போது, நீட் தேர்வு, காகிதம் மற்றும் பேனாவை பயன்படுத்தி, வழக்கமான முறையில் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் அடிப்படையில், நீட் தேர்வை ஆன்லைன் முறைக்கு மாற்றலாமா என்று பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நீட் தேர்வை நடத்தும் நிர்வாக அமைச்சகம், மத்திய சுகாதார அமைச்சகம் ஆகும். எனவே, நீட் தேர்வை வழக்கம்போல் காகிதம், பேனாவை பயன்படுத்தி நடத்தலாமா? அல்லது ஆன்லைன் முறையில் நடத்தலாமா என்று மத்திய சுகாதார அமைச்சகத்துடன் மத்திய கல்வி அமைச்சகம் ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுவரை 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன. நீட் தேர்வுக்கு எது சிறந்த முறையாக இருக்குமோ, அதை பின்பற்ற தேசிய தேர்வு முகமை தயாராக உள்ளது.
எந்த முறை என்று விரைவில் முடிவு செய்யப்படும். அந்த முறையில் அடுத்த ஆண்டில் இருந்து நீட் தேர்வு நடத்தப்படும்.
நீட் தேர்வு முறைகேடு பற்றி ஆராய அமைக்கப்பட்ட ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் தேர்வு சீர்திருத்தங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதன்படி, அடுத்த ஆண்டில் இருந்து, உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளில் மட்டுமே தேசிய தேர்வு முகமை கவனம் செலுத்தும். வேலைக்கான ஆள்தேர்வுகளை நடத்தாது.
பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கான ‘கியூட்’ தேர்வு, எப்போதும்போல் ஆண்டுக்கு ஒருதடவை நடத்தப்படும்.
அடுத்த ஆண்டு, தேசிய தேர்வு முகமை மாற்றி அமைக்கப்படும். குறைந்தபட்சம், 10 புதிய பதவிகள் உருவாக்கப்படும். தேர்வுகளில் தவறு நடக்காதவகையில், தேசிய தேர்வு முகமையின் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் கொண்டுவரப்படும்.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) தற்போது ஆண்டுக்கு 5 கோடி புத்தகங்களை அச்சிட்டு வருகிறது. அடுத்த ஆண்டில் இருந்து 15 கோடி புத்தகங்களை அச்சிடும். அதனால் சில வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்களின் விலை குறையும். ஆனால், எந்த வகுப்பின் புத்தகங்களும் உயராது. பெற்றோருக்கு நிதிச்சுமை ஏற்படாது.
தரம் உயர்த்தப்பட்ட பாடத்திட்டத்தின்படி, 9 முதல் 12-ம் வகுப்புகளுக்கான புதிய பாடப்புத்தகங்கள், 2026-2027 கல்வியாண்டில் இருந்து கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.