பள்ளிக் கல்வி பயிலும் ஒவ்வொருவருக்கும் முக்கியமான காலகட்டம் எதுவெனில் பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் என்ன படிக்கலாம் என்பதை தேர்வு செய்வதில்தான் உள்ளது. நாம் தேர்ந்தெடுக்கும் படிப்புதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும். பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு மேற்கொண்டு என்ன படிக்கலாம் எந்தத் துறையைத் தேர்ந்தெடுக்கலாம்? என்ன ஒவ்வொரு மாணவர்களும் தங்களுடைய எதிர்காலத்தைத் தேர்வு செய்ய வேண்டிய தருணம் இது. முதல் மதிப்பெண் பெற்றவர்கள்தான் வாழ்க்கையில் முன்னேறுவார்கள், அதிக மார்க் வாங்கியவர்கள்தான் அனைத்து வசதியான வாழ்க்கையையும் வாழ்வார்கள் எனும் தவறான மனப்போக்கை மாணவர்கள் மனதில் விதைக்காமல் உனக்குப் பிடித்த துறையைத் தேர்வு செய் என்று பெற்றோர்கள் அறிவுறுத்தும் தருணம் இது.
பள்ளிக்கல்வியை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் முதலில் உயர் கல்வியில் என்னென்ன துறைகள் இருக்கிறது என்று தெரிந்து கொள்வது நல்லது. இங்கே ஒவ்வொரு துறை ரீதியாக பலவிதமான பட்டப்படிப்புகள் உண்டு. பெற்றோர்களும் மாணவர்களும் இணைந்து, பிடித்த, ஈடுபாடுள்ள துறையிலான படிப்பைத் தேர்வு செய்வது அவசியம். லட்சக்கணக்கான பணத்தைச் செலவு செய்து படிக்கும் உயர்கல்விதான் சிறந்த கல்வி. அப்படி படித்தால்தான் உடனடியாக வேலை கிடைக்கும் என்கிற தவறான புரிதல் இங்கு இன்னும் மிஞ்சியிருக்கிறது.
மருத்துவம்
நீட் தேர்வு கட்டாயம் எனும் விதிமுறைக்குப் பிறகு M.B.B.S., மருத்துவப் படிப்புக்கான மோகம் சற்று குறைந்து காணப்படுகிறது. இதற்கு இணையான சித்தா, ஹோமியோபதி, யுனானி, யோகா, நேச்சுரோபதி என ஐந்தரை ஆண்டு கால படிப்பில் சேர்வதற்கு மத்திய அரசால் நடத்தப்படும் அகில இந்திய அளவிலான பிரத்யேகத் தேர்வுகள் எழுதவேண்டும். கால்நடை மருத்துவப் படிப்பான B.Veterinary Science பட்டப்படிப்பும் நல்ல துறைதான் என்கிறார்கள் வல்லுநர்கள்.
மருத்துவப்படிப்புக்கு நிகராக தற்போது B.P.T எனப்படும் பிஸியோதெரபி படிப்புகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளன. பிளஸ் டூ மதிப்பெண்களுடன் நுழைவுத்தேர்வு அல்லது மாநில அளவில் பொது கலந்தாய்வின் மூலம் சேரலாம். இதேபோன்று B.Sc Nursing, B.Pharm., D.Pharm., படிப்புகளையும் பெறலாம். தற்போது மருத்துவப்படிப்பைத் தாண்டி இவை வேலைவாய்ப்பு அதிகமுள்ள துறைகளாக வளர்ந்து வருகின்றன.
அறிவியல் சார்ந்த படிப்புகள்
B.Sc, Physics முடித்து M.Sc., படித்தால் அரசு நிறுவனங்களில் விஞ்ஞானிகளாக பணிபுரியலாம். ஆராய்ச்சித்துறையில் அதிக வேலை வாய்ப்புகள் உண்டு. அரசுக் கல்லூரியில் இத்தகைய படிப்புக்கு கட்டணமும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. B.Sc Chemistry மருந்து தயாரிப்பு குறித்த பணியிலும் வேலை வாய்ப்புகள் உண்டு. அதே நேரம் M.Sc., படித்து முடித்து CSIR தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் நல்ல ஊதியத்துடன் பணி நிச்சயம். B.Sc. Mathematics and Statistics போன்ற பிரிவுகளையும் படிக்கலாம்.
கலை சார்ந்த படிப்புகள்
B.A Economics and History போன்றவை டிகிரியாக கருதப்படும் அதேவேளையில், மேற்கொண்டு இதே துறையில் உயர்கல்வியை படித்தால் விற்பனை, பொருளாதாரம், வர்த்தகம் போன்ற துறையில் வேலைவாய்ப்பைப் பெறலாம். இவை தவிர மொழிப்பாடங்களான B.A. English சேர்ந்து அவற்றிலேயே முதுகலையும் முடித்து M.Phil., பட்டம் பெற்று ஆசிரியராகப் பணிபுரியலாம். அரசு மற்றும் தனியார் கல்வித் துறைகளில் வேலைவாய்ப்பு அதிகமுள்ள படிப்பு இது. ஊடகத்துறையில் விருப்பம் உள்ளவர்கள் B.A. Media, B.Sc. Visual Communication, Mass Communication, எலக்ட்ரானிக்ஸ் மீடியா, Journalism படிப்பில் சேர்ந்து படிக்கலாம். ஆங்கிலப் புலமையும் கற்பனைத்திறனும் அறிவுத்திறனும் இருந்தால் ஊடகத்துறையில் சிறந்து விளங்கலாம். 12ஆம் வகுப்பில் வணிகம், கணக்குப்பிரிவு படித்த மாணவர்கள், வருங்காலத்தில் C.A., முடித்து ஆடிட்டராக வேண்டும் என்ற மாணவர்களின் முதல் சாய்ஸ் B.Com., படிப்புதான். அதைத் தொடர்ந்து CA., CMA., ICWAI., ACS., ICS., தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மருத்துவர், பொறியாளருக்கு இணையான பதவியும், ஊதியமும் கிடைக்கும். உயர்ந்த நிறுவனங்களில் கணக்காளராக பதவி புரியும் வாய்ப்பு அதிகம். முன்பெல்லாம் பட்டப்படிப்பை முடித்த பிறகுதான் இதர தேர்வுகளுக்கு முயற்சி செய்யமுடியும். ஆனால் தற்போது பட்டப்படிப்பு படிக்கும்போதே இந்தப் பயிற்சிக்கான தொடக்க நிலை தேர்வுகளையும் எழுதுவதால் காலம் வீணாவதில்லை. பிபிஏ எனப்படும் மேலாண்மை படிப்பு பெரிய நிறுவனங்களில் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவில் வேலைவாய்ப்பை உருவாக்கித் தரும். இதைத் தொடர்ந்து MBA., முடித்தால் வெளிநாடுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பணி புரியலாம். உலகம் கணினி மையம் என்பதால் கணினித் துறையில் ஆர்வம் இருப்பவர்கள் B.C.A., B.Sc., Mathematics Science கணினி அறிவியல் கல்வியில் சேரலாம். IT எனப்படும் தகவல் தொழில்நுட்பத் துறையில் அதிக வேலைவாய்ப்புகள் இந்தத் துறைக்கு வந்துகொண்டே இருக்கின்றன. மேலும் M.Sc., முடித்தால் பொறியாளருக்கு இணையான ஊதியத்தையும் ஐடி துறையில் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஓவியத்தில் திறமை இருப்பவர்கள் அரசு ஓவிய நுண்கலைக் கல்லூரியில் BFA., படிப்பில் சேரலாம். இசைத்துறையில் ஆர்வமிக்கவர்கள் அரசு இசைக் கல்லூரிகளில் சேரலாம். திரைப்படத்துறையில் கால்பதிக்க விரும்புபவர்களுக்கு சென்னை அரசு திரைப்படக்கல்லூரியில் பல பிரிவுகளுக்கு டிப்ளமோ படிப்பு கற்றுத்தரப்படுகிறது. அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் Fashion Technology பட்டப்படிப்புக்கு வேலைவாய்ப்பு பெருகியுள்ளது. ஆடை வடிவமைப்பு, ஆடை உற்பத்தி, புதிய டிஸைன்கள் வடிவமைப்பு போன்ற பட்டப்படிப்புகள் இதில் சொல்லித் தரப்படுகின்றன. சென்னை தரமணியில் மத்திய அரசுக் கல்லூரியான National Institute of Fashion Technology என்னும் புகழ் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயிலலாம்.
வேளாண் துறை சார்ந்த படிப்புகள்
தற்போது இந்தத் துறைக்கு மவுசு கூடியுள்ளது. B.Sc., Agriculture and Gardening. வேளாண் பல்கலைக்கலையின் கீழ் கோவை, திருச்சி, பெரியகுளம் போன்ற இடங்களிலும் இந்தப் படிப்புகள் உண்டு. B.Tech., எனும் Food Process Engineering படிப்பும் வேலை வாய்ப்புள்ள படிப்புதான். சமையல் சார்ந்த படிப்பான கேட்டரிங், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், சுற்றுலாத்துறை போன்ற படிப்புகள் நேரிடையாக வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. ஐடி நிறுவனங்கள் மட்டும்தான் வெளிநாடுகளில் பணிவாய்ப்பு வழங்கும் என்றில்லாமல் உணவுத்துறை சம்பந்தப்பட்ட இந்த படிப்புகள் விமானம், கப்பல் மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் புகழ்பெற்ற சமையல் நிபுணராக உங்களை உருவாக்கும். இளநிலை பட்டப்படிப்புகளை வழங்கும் அரசுக் கல்லூரிகளும், தனியார் கல்லூரிகளும் நூற்றுக்கணக்கில் புகழ்பெற்று விளங்குகின்றன. தற்போது B.Sc., Computer Science, Bio Technology, Micro Biology, Bio Chemistry, Plant Biology, Diatecian, Home Science, Psychology போன்ற பட்டப்படிப்புகளையும் இணைத்து கற்றுத்தருகின்றன. இப்போது சட்டக்கல்லூரியில் சேர்வதற்கு விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது. அரசு சட்டக்கல்லூரிகளில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பில் எந்த குரூப் எடுத்திருந்தாலும் சேரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பொறியியல்
அகில இந்திய அளவில் B.E., B.Tech., படிக்க விரும்பும் மாணவர்கள் I.I.T., N.I.T., நிறுவனங்களில் சேர்வதையே விரும்புகிறார்கள். இதற்கென பிரத்யேக நுழைவுத்தேர்வுகள் உண்டு. JEE., முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் NITயிலும் JEE Advanced Entrance Exam தேர்வில் தேர்ச்சி பெற்றால் IITயிலும் சேர்ந்து படிக்கலாம். இவற்றைத் தவிர்த்து பொறியியல் படிப்புகளில் அண்ணா பல்கலைக்கழகம், அங்கீகாரம் பெற்ற தனியார் பொறியியல் கல்லூரிகளில் நுழைவுத்தேர்வு முறை இல்லாமல் கலந்தாய்வு முறையில் சேர்க்கை நடைபெற்றுவருகிறது.