‘தண்டட்டி’ திரைப்பட விமர்சனம்

தேனி மாவட்டம், கிடாரிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 57 வயது மூதாட்டியான ரோகினி காணாமல் போகிறார். தனது அப்பத்தாவை கண்டுபிடித்து தருமாறு கிஷோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க, அவருடன் சேர்ந்து காவலர் பசுபதி ரோகிணியை தேடி கண்டுபிடிக்கிறார். கண்டுபிடிக்கப்பட்ட ரோகிணி சில மணி நேரங்களில் இறந்து விட, அவரது உடலை கிடாரிப்பட்டிக்கு காவலர் பசுபதி எடுத்துச் செல்கிறார். இறந்த தாயின் காதில் இருக்கும் தண்டட்டியை கைப்பற்ற அவரது பிள்ளைகள் திட்டம் போட, திடீரென்று தண்டட்டி காணாமல் போய்விடுகிறது.

காணாமல் போன தண்டட்டியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவலர் பசுபதி இறங்க, அதனால் பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. அந்த பிரச்சனைகளை சமாளித்து, தண்டட்டியை பசுபதி எப்படி கண்டுபிடிக்கிறார். அதை திருடியது யார், ரோகிணி காணாமல் போனது ஏன், என்பதை நகைச்சுவையோடும், காதலோடும் சொல்வது தான் ‘தண்டட்டி’ படத்தின் மீதிக்கதை.

தங்கப்பொண்ணு என்ற கதாபாத்திரத்தில் மூதாட்டியாக நடித்திருக்கும் ரோகிணி, தனது அனுபவமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உயிருடன் இருக்கும் போது, உயிரிழந்த உடலாக இருக்கும் போதும் தனது வேலை சரியாக செய்து ரசிகர்கள் மனதில் நிற்கிறார்.
காவலர் சுப்பிரமணி வேடத்தில் நடித்திருக்கும் பசுபதி, மொத்த படத்தையும் தனது தோளில் சுமந்திருக்கிறார். காணாமல் போன ரோகிணியை கண்டுபிடிப்பதற்காக கதைக்குள் வருபவர், ரோகிணி இறுதி சடங்கு வரை உடனிருக்க வேண்டிய சூழலில் சிக்கிக்கொண்டு தவிப்பதும், கிடாரிப்பட்டி ஊர் மக்களால் விழி பிதுங்கி நிற்பதும் நம்மை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறது.

இளம் வயது ரோகிணியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி, சிறிது நேரம் வந்தாலும், அவரது கதை ரசிகர்கள் மனதை பாதிக்கும்படி இருக்கிறது. ரோகிணியின் குடிகார மகனாக நடித்திருக்கும் விவேக் பிரசன்னா, தனது கதாபாத்திரத்தை கவனமாக கையாண்டு கவனம் ஈர்த்தாலும், சில இடங்களில் தேனி மாவட்ட வசன உச்சரிப்பை தவற விட்டுவிடுகிறார். இருந்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.

ரோகிணியின் மகள்களாக நடித்திருக்கும் தீபா சங்கர், பூவிதா, ஜானகி, செம்மலர் அன்னம் ஆகியோருக்கு வழக்கமான கிராமத்து கதாபாத்திரம் தான் என்றாலும், அதை நிறைவாக செய்திருக்கிறார்கள்.
மகேஷ் முத்துசுவாமியின் ஒளிப்பதிவு கிராமத்து சடங்குகளையும், கிராமத்து மக்களையும் இயல்பாக படமாக்கியிருக்கிறது. கே.எஸ்.சுந்தரமூர்த்தியின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

படத்தொகுப்பாளர் சிவா தண்டட்டியை சுற்றி நடக்கும் சம்பவங்களை நேர்த்தியாக தொகுத்திருந்தாலும், பல இடங்களில் இன்னும் கூட கத்திரி போட்டிருக்கலாம். தண்டட்டியை மையமாக வைத்து எழுதிய கதையை நகைச்சுவையாக நகர்த்தி சென்றாலும், அதனுள் உணர்ச்சிகரமான இரண்டு காதல் கதைகளை மிக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ராம் சங்கையா.

துக்க வீடு மற்றும் அங்கு நடக்கும் சடங்குகள், அங்கிருக்கும் மக்களின் மனநிலை மற்றும் உறவினர்களுக்கு இடையே நடக்கும் மோதல்கள் ஆகியவற்றை எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கும் இயக்குநர் ராம் சங்கையா, ஒப்பாரி பாட்டிகளை படம் முழுவதும் காட்டியிருப்பதோடு, அவர்களை வைத்துக்கொண்டே ஒரு பாடல் காட்சியையும் படமாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. அதிலும், பசுபதியை கலாய்த்து தள்ளும் கோளாறு பாட்டியால் ஒட்டு மொத்த திரையரங்கமே சிரிப்பால் அதிர்கிறது.

கிடாரிப்பட்டி கிராமத்துக்கு கொடுக்கப்படும் பில்டப்புக்கு ஏற்ற காட்சிகள் இல்லாதது சற்று குறையாக இருந்தாலும், அந்த குறையை தண்டட்டிக்காக ரோகிணியின் மகள்கள் போடும் சண்டை சரி செய்து திரைக்கதைக்கு கூடுதல் சுவாரஸ்யத்தை கொடுக்கிறது.

கிராம மக்களின் எதார்த்தமான நடிப்பு, இயல்பான கதைக்களம் மற்றும் காமெடி காட்சிகள் மூலம் படம் முழுவதையும் ஜாலியாகவும், நகைச்சுவையாகவும் நகர்த்தி செல்லும் இயக்குநர் ராம் சங்கையா, ரோகிணியின் இளம் வயது காதல் கதை மூலம் நமக்கு வேறு விதமான உணர்வுகளை கொடுத்து விடுகிறார்.
மொத்தத்தில் ‘தண்டட்டி’ மின்னுகிறது.