திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இன மக்களை எப்படியாவது ஆள வேண்டும் என்று துடிக்கும்- சீமான்

தமிழ் ஈழ அரசியல் பிரிவு பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் 17-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி சென்னை போரூரில் நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகத்தில் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார். அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரு கண்களாக எப்படி இருக்க முடியும்? விஷமும், விஷத்துக்கான மருந்தும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? வில்லனும், கதாநாயகனும் எப்படி ஒன்றாக முடியும்?. திராவிடம் என்பது தமிழ்த் தேசிய இன மக்களை எப்படியாவது ஆள வேண்டும் என்று துடிக்கும். தமிழ் தேசியம் என்பது மற்ற மொழி வழி தேசிய இனங்களை போன்று தமிழர்களும் உயர்ந்து, சிறந்து பெருமையோடு வாழ வேண்டும் என்று துடிக்கும். இது இரண்டும் ஒன்றா?.

அடுத்தவன் மொழி எப்படி எனக்கு கொள்கை மொழியாக இருக்க முடியும்? கொள்கை மொழி என் தாய்மொழிதான். விரும்பினால் எம்மொழியையும் கற்கலாம். தமிழ் பயிற்று மொழி. ஆங்கிலம் கட்டாய பாடமொழி. உலகத்தின் எல்லா மொழிகளும் எங்கள் விருப்ப மொழி. விரும்பினால் கற்போம். மும்மொழி கொள்கை மோசடி கொள்கை. இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை. தமிழே எங்கள் மொழி.

திராவிடம், தமிழ்த் தேசியம் என்றால் என்ன? விளக்கம் யார் சொல்வார்கள்? மதசார்பற்ற சமூகநீதி எப்படி? தம்பி என்ற உறவு வேறு. கொள்கையில் எதிரி வேறு. என்னை பெற்ற தாய், தந்தையரே கொள்கைக்கு எதிராக இருந்தாலும் எதிரிதான். சாதி, மதம், மொழி, இனம் ஒன்றா?. மொழி தேசிய இனத்தின் முகம். சாதி, மதத்தை மொழி இனத்தோடு ஒப்பிடுவதே அடிப்படை பைத்தியக்காரத்தனம். உலகெங்கும் மொழியின் அடிப்படையில்தான் அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளதா? சாதி, மத வழியால் பிரிக்கப்பட்டு இருக்கிறதா?

ஒன்று கொள்கையை மாற்ற வேண்டும். இல்லையென்றால் எழுதி கொடுத்தவரை மாற்ற வேண்டும். நாம் தமிழர், தமிழ்த் தேசியத்துக்கு இதயத் துடிப்பில் வாழ்பவர்கள் அல்ல. லட்சியத் துடிப்பில் வாழ்பவர்கள். ரத்த உறவைவிட, லட்சிய உறவே மேலானது. குடும்ப உறவைவிட கொள்கை உறவுதான் மேலானது. அண்ணன், தம்பி வேறு. கொள்கை என்று வந்து விட்டால் பகைதான்.

மொழிக்கொள்கை தவறாக இருக்கிறது. திராவிடமும், தமிழ்த்தேசியமும் இரண்டும் தேவை என்பது தவறாக உள்ளது. திராவிடம் வலிமையாக வாரிசோடு உள்ளது. பிறகு நீங்கள் எதற்கு?

அடிப்படையே தவறாக இருக்கிறது. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் வைக்கக்கூடாது. அது வலுவாக இருக்காது. கூட்டத்தை வைத்து பேசக்கூடாது. எத்தனை லட்சம் பேர் விஜய் கூட்டத்தில் கூடினார்கள்?. எனக்கு 36 லட்சம் பேர் வாக்கு செலுத்தியுள்ளார்கள். எனவே கூட்டத்தை வைத்து கணக்கிடக்கூடாது. விஜயகாந்துக்கு கூடாத கூட்டம், விஜய்க்கு கூடிவிட்டதா?.

விஜய் கட்சியின் கொள்கையில் உடன்பாடு இல்லை. முரண்பாடு உள்ளது. கொள்கையை திருத்தி கொள்ளவேண்டும் என சொல்கிறோம். என்னுடைய கோட்பாட்டை ஏற்று, நாங்கள் நாட்டை ஆண்டால், நாடும், மக்களும் நன்றாக இருப்பார்கள் என்று நம்புபவர்கள் எங்களுக்கு வாக்களிப்பார்கள். அதனை பிரிக்கவோ, பறிக்கவோ முடியாது. யாருடைய வாக்கையும் யாரும் பிரிக்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.