கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் சஞ்சய் கமிட்டான புகைப்படங்கள் வைரலாகி இருந்தன. சஞ்சய் இயக்கவுள்ள படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஹீரோவாக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோலிவுட்டின் மாஸ் ஹீரோக்களில் ஒருவரான விஜய், லியோ படத்தை முடித்துவிட்டு தளபதி 68ல் கவனம் செலுத்தி வருகிறார். சினிமாவில் விஜய்யை அறிமுகப்படுத்தியதோடு ஆரம்பகாலத்தில் படங்களை இயக்கியது அவரது அப்பா எஸ்.ஏ சந்திரசேகர் தான். அப்பா இயக்குநராகவும் மகன் ஹீரோவாகவும் கோலிவுட்டை கலக்கி வந்தனர். இப்போது இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தை இல்லையென சொல்லப்படுகிறது.
இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், அப்பாவை போல ஹீரோவாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவரோ வெளிநாட்டில் சினிமா மேக்கிங் குறித்து படித்துவிட்டு தற்போது இயக்குநராகிவிட்டார். அதிலும் ஜேசன் சஞ்சய்யின் முதல் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ளது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. யாரிடமும் உதவி இயக்குநராக வேலை பார்க்காத சஞ்சய்க்கு இது செம்மையான ஜாக்பாட் என்றே சொல்லப்படுகிறது.
லைகா தலைவர் சுபாஸ்கரன் முன்னிலையில் ஜேசன் சஞ்சய் கையெழுத்திட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இந்நிலையில், இந்தப் படத்தின் ஹீரோ யார் என்பது தான் ரசிகர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக இருந்தது. அதன்படி, ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கவுள்ளதாக முதலில் செய்திகள் வெளியாகின. லைகா தரப்பில் இருந்து விஜய் சேதுபதியிடம் இதுகுறித்து பேசி வருவதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால், தற்போது விஜய் சேதுபதிக்குப் பதிலாக துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆதித்யா வர்மா திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான துருவ், இதுவரை சரியான கம்பேக் கிடைக்காமல் போராடி வருகிறார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜேசன் சஞ்சய் படத்தில் ஹீரோவாக கமிட்டாகியுள்ளதாகத் தெரிகிறது.
இதுகுறித்து விரைவில் அபிஸியல் அப்டேட் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மானின் மகன் அமீன் அறிமுகமாகலாம் என ஒரு பேச்சு அடிபடுகிறது. ஏஆர் அமீன், துருவ் விக்ரம், ஜேசன் சஞ்சய் மூவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வருகின்றனர். அதனால் முழுக்க முழுக்க வாரிசுகளின் கூட்டணியில் இந்தப் படம் உருவாகலாம் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.