மும்பை - சான்பிரான்சிஸ்கோ இடையே நேரடி விமான சேவை, மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

புதுடெல்லி : மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது இழப்பில் இயங்கி வந்ததாக கூறப்பட்ட ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த ஜனவரி மாதம் டாடா குழுமம் கையகப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கேம்ப்பெல் வில்சன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவையில் ஏர் இந்தியாவின் பங்கை 30 சதவிகிதம் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடந்த மாதம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, விமான சேவைகள் மற்றும் விமானங்களின் எண்ணிக்கையை ஏர் இந்தியா அதிகரித்து வருவதன் ஒரு பகுதியாக, மும்பையில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகருக்கு வாரத்துக்கு 3 முறை செல்லக்கூடிய முதல் வேகமான மற்றும் இடைநில்லா நேரடி விமான சேவையை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா நேற்று டெல்லியில் இருந்தபடி காணொலி மூலம் தொடங்கி வைத்தார்.