இரண்டு வகை பார்வைக் குறைபாட்டுக்கும் பயன்படுத்துமாறு AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுதான் `லோ விஷன் கிளாசஸ்.’
வளர்ந்து வரும் தொழில்நுட்பமான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) தற்போது மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விவசாயம் தொடங்கி விண்வெளி முதல் அனைத்திலும் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தச் செயற்கை நுண்ணறிவு, மருத்துவத்துறையிலும் பெரும் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் பார்வைத்திறன் இல்லாதவர்கள் மற்றும் பார்வை திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும் வகையில் AI தொழில்நுட்பத்தில் கண்ணாடி ஒன்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
Low vision Glasses என்று அழைக்கப்படும் இந்தக் கண்ணாடி எப்படி பயன்படுகிறது என்று பார்ப்போம்.
“பார்வைத்திறன் முற்றிலும் இல்லாதது, குறைவான பார்வைத் திறன் என பார்வைக் குறைபாடு இரண்டு வகைப்படும். முதல் வகையினரை முற்றிலும் பார்வை அற்றவர்கள் என்றும் இரண்டாவது வகையினரை `லீகலி பிளைண்ட்’ (legally blind) எனவும் குறிப்பிடுவோம்.
இந்த இரண்டு வகை பார்வைக் குறைபாட்டுக்கும் பயன் படுத்துமாறு AI தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டதுதான் `லோ விஷன் கிளாசஸ்’. இது பார்ப்பதற்கு சாதாரண கண் கண்ணாடி போன்றுதான் இருக்கும். கண்ணாடியின் ஓரத்தில் ஒரு சிறிய பெட்டி போன்ற அமைப்பு இருக்கும். அந்தக் கண்ணாடியின் முன்பு ரூபாய் நோட்டுகள், போட்டோக்கள், கிரெடிட் கார்டு போன்றவற்றைக் காண்பித்து புரொகிராம் செய்துகொள்ள வேண்டும். மீண்டும் அதே விஷயங்கள் கண்ணாடியின் முன்னால் வரும்போது அதை குரலால் உணர்த்தும்.
உதாரணத்துக்கு, அதில் சஞ்சய் என்றவரின் போட்டோ பதியப்பட்டுள்ளது என்று வைத்துக்கொள்வோம். அந்த நபர் கண்ணாடி அணிந்திருக்கும் நபரின் முன்பாக வரும்போது அதை அடையாளம் கண்டு அவரின் பெயரை அறிவிக்கும். மேலும், அதில் ஒரு கேமரா, சென்சார் பொருத்தப்பட்டிருக்கும். வாகனங்கள், வேகத்தடை, போக்குவரத்து சிக்னல்கள் போன்றவற்றை அடையாளம் காணவும் எச்சரிக்கை செய்யவும் உதவும்.