இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான “இந்தியன் 2” திரைப்படம் கடந்த ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான “இந்தியன்” படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
லைகா நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார், படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது என்றே கூறலாம். சில நாட்களுக்கு முன் இந்தியன் 2 படத்தை NETFLIX ஓடிடி தளம் அதிக தொகைக்கு வாங்கியதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இந்தியன் 2 திரைப்படம் NETFLIX ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் தற்போது உலா வருகிறது.
பொதுவாக திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள் நான்கு வாரங்கள் கழித்துதான் ஓடிடி தளத்தில் வெளியாவது வழக்கம், ஆனால் இந்தியன் 2 திரைப்படம் அதற்கு முன்னரே வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.