திருமணத்தில் கங்கணம் கட்டுவது எதற்காக தெரியுமா? தெரிஞ்சுக்கோங்க…

பொதுவாகவே திருமண சம்பர்தாயத்தில் ஒன்றாக ஐயர் மாப்பிள்ளை கையில் கங்கணம் கட்டுவதை மரபாகக் கொண்டுள்ளோம். அதே போல மாப்பிள்ளை, மணப்பெண் கையில் கங்கணம் கட்டுவதை பார்த்திருப்போம். எதற்காக இதை செய்கிறார்கள் என நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. இந்த தொகுப்பில் அதற்கான விடையை காணலாம்.

கங்கணம் கட்டும் சடங்கு எதற்காக?

கங்கணம் (அ) காப்பு என்பது திருமண சடங்குகள் தங்கு, தடையின்றி நடைபெறுவதற்கான ஒரு அரண் போன்றது. ஒரு தாம்பூலத்தில் அரிசி பரப்பி அதில் தேங்காய், வெற்றிலை, பாக்கு, பழம், காப்பு மற்றும் நூல் முதலியவற்றை வைத்து பூஜை செய்து மாப்பிள்ளையின் வலது மணிக்கட்டில் காப்புக் கட்டுவார்கள்.
மங்களகரமான மஞ்சள் கயிற்றை காப்பாக கட்டுவதல் மூலம் திருஷ்டி மற்றும் தீய சக்திகளால் திருமணத்தில் எவ்விதமான இடையூறுகள் நேராமல் திருமணம் நல்லபடியாக முடிய வேண்டி காப்பு கட்டபடுகிறது. மணமகன் காப்புக் கட்டியதில் இருந்து மறுநாள் தனது கையில் உள்ள காப்பை அவிழ்க்கும் வரை திருமணம் சம்பந்தமான அனைத்து நிகழ்ச்சிகளையும் மனநிறைவுடன் எவ்விதமான தடையுமின்றி செய்வேன் என்பதை உறுதி செய்யும் சடங்காகும்.

மணமகனுக்கு மட்டும் காப்பு என்பது கிடையாது, மணமகளுக்கும் காப்பு உண்டு. மணமகனுக்கு வலது கையில் ஐயர் காப்பு கட்ட, மணமகன் மணபெண்ணுக்கு இடது கையில் காப்பு கட்டுவார். ஆணுக்கு தெய்வம் தான் காப்பு. பெண்ணுக்கு ஆண் தான் காப்பு. இந்தக் காப்பை கட்டி விட்டால் அது அவிழ்க்கும் வரை எந்தத் தீட்டும் அவர்களைச் சேராது. திருமணம் தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளும் பிரச்சனைகள் இன்றி நடைபெற அவரவர் குலதெய்வத்தை வேண்டி கையில் கட்டப்படுவது ஆகும்.

பொன்னுருக்குதல் எதற்காக?

திருமாங்கல்யம் என்பது சுமங்கலி பெண்ணின் முக்கிய அடையாளம் ஆகும். அதை அவர்கள் எந்நாளும் போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த திருமாங்கல்யத்தை நல்ல மூகூர்த்த நாளில், தீர்க்க சுமங்கலியாக வாழ்வதற்கு மாப்பிள்ளை வீட்டில் வைத்து அனுபவம் வாய்ந்த பொற்கொல்லரிடம் புதிய பொன் (தங்கம்) கொடுத்து திருமாங்கல்யம் செய்ய வேண்டும்.

நிச்சயத்தாம்பூலம் என்பது என்ன?

திருமணத்தின் போது மாப்பிள்ளை வீட்டார் கொடுக்கும் சேலையை தரையில் விரித்து அதில் மணப்பெண் அமர்ந்து மங்களப் பொருட்களை இருவீட்டாருக்கும் பரிமாறி கொள்வதன் மூலம் இப்போது முதல் இருவீட்டாரும் ஒன்றாகி விட்டதற்கான அடையாள நிகழ்ச்சியாகும். அவ்விதம் கொடுக்கும் மங்களப்பொருட்களை (மஞ்சள் கலவை, வெற்றிலை, பாக்கு, பூ, தேங்காய், பழங்கள்) நிரப்புதல் (நிச்சயத்தாம்பூலம்) ஆகும்.