தற்போது கம்ப்யூட்டர் முன்பு வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வதால், பலரும் கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். சமீப காலமாக குளுக்கோமா என்னும் கண் அழுத்த நோயால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குளுக்கோமா என்பது ஒரு நாள்பட்ட கண் நோயாகும்.
இது கண்களின் பின்புறத்தில் உள்ள நரம்பான பார்வை நரம்பை சேதப்படுத்துவதன் மூலம் பார்வை இழப்பு மற்றும் குருட்டுத்தன்மையை உண்டாக்கும். முக்கியமாக இந்த வகை நோயின் அறிகுறியானது மெதுவாக இருக்கும் மற்றும் கவனிக்க முடியாததாக இருக்கும். இந்த கண் அழுத்த நோய் இருப்பதை ஒருவர் விரிவான கண் பரிசோதனைகளின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும்.
கண்களின் ஆரோக்கியம் மற்றும் கண்களுக்கு தீங்கு விளைவிப்பது குறித்து பல விஷயங்கள் கூறப்படுகின்றன. ஆனால் அவை அனைத்துமே உண்மை தானா என்று கேட்டால், நிச்சயம் பலரால் உறுதியாக கூறமுடியாது. அதுவும் ஒருவரது கண்ணைக் குருடாக்கும் குளுக்கோமா நோய் குறித்து மக்களிடையே பலவிதமான தவறான கருத்துக்கள் பரவியுள்ளன.
கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்தால் குளுக்கோமா ஏற்படுமா?
குளுக்கோமாவிற்கும், கம்ப்யூட்டர் முன் நீண்ட நேரம் வேலை செய்வதற்கும் எந்த தொடர்பும் இல்லை. குறைவான வெளிச்சத்தில் படிப்பதோ அல்லது வேலை செய்வதோ கண்களில் எவ்வித காயங்களையும் ஏற்படுத்தாது. ஆனால் அது கண்களை சோர்வடையச் செய்யும்.
குளுக்கோமாவிற்கு குறிப்பிட்ட அறிகுறிகள் உள்ளனவா?
குளுக்கோமா நோய்க்கு குறிப்பிட்ட அறிகுறிகள் இல்லை. ஆனால் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள், குளுக்கோமா நோய் இருந்தால், அது கண்களில் நீர்வடிதல் அல்லது மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளை சந்தித்ததாக தெரிவித்துள்ளனர். இந்த அறிகுறிகள் பல கண் பிரச்சனைகளின் பொதுவான அறிகுறிகளாக இருப்பதால், குளுக்கோமா பிரச்சனையை ஆரம்பத்திலேயே கண்டறிய முடியாமல் போகிறது.
குளுக்கோமா வயதானவர்களை மட்டுமே பாதிக்குமா?
குளுக்கோமா ஒருவருக்கு எந்த வயதிலும் ஏற்படலாம். ஆனால் வயதானவர்களிடையே அதிகம் காணப்படுகிறது. முக்கியமாக 60 வயதிற்கு மேல் ஒருவருக்கு பார்வை குருடாவதற்கு இந்த குளுக்கோமா தான் காரணம். பல வகையான குளுக்கோமாவிற்கு எவ்வித எச்சரிக்கை அறிகுறிகளும் இல்லை. ஆனால் அதன் தாக்கம் மெதுவாக இருப்பதால், ஆரம்பத்தில் கண்டறிவது கடினம். பார்வையில் மாற்றங்களை காணும் வரை கண்டறிய முடியாது.
சர்க்கரை நோய் விழித்திரையை மட்டுமே பாதிக்குமா?
பொதுவாக சர்க்கரை நோயானது உடலின் அனைத்து உறுப்புக்களையும் பாதிப்பது போல், கண்களின் அனைத்து பகுதிகளையும் பாதிக்கும். அதனால் தான் சர்க்கரை நோயாளிகளுக்கு ரெட்னோபதி மற்றும் கண்புரை ஆகியவை பொதுவாக ஏற்படுகின்றன. அதேப் போல் சர்க்கரை நோயாளிகளுக்கும் குளுக்கோமா ஏற்படுவதற்கான அபாயம் அதிகம் உள்ளன.
குளுக்கோமா ஒரு கண்ணை மட்டும் தான் பாதிக்குமா?
குளுக்கோமாவானது எப்போதும் இரண்டு கண்களையும் பாதிக்கும். ஆனால் ஒரு கண்ணானது மற்றதைவிட முன்னதாகவே பாதிக்கப்படும். மொத்தத்தில் குளுக்கோமா ஒருவரது பார்வையை அமைதியாக அழிக்கக்கூடிய ஒரு கொடிய நோய். எனவே உங்கள் வீட்டில் யாருக்கேனும் குளுக்கோமா இருந்தால், 30-40 வயதை எட்டியதும் அடிக்கடி கண்களை பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம். அத்துடன் கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சத்தான உணவுகளை உட்கொண்டு, தினமும் கண்களுக்கு போதுமான ஓய்வுகளை கொடுத்து வந்தால், கண்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும்.