மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஏ. துரைராஜ், கட்டடத் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் பசுமையை காக்கும் வண்ணம் அன்றாடம் மரங்களை நட்டு பராமரித்து வருகிறார். 2002ஆம் ஆண்டு இவர் பணி செய்து கொண்டிருந்த இடத்தில் ஒரு பெரிய மரமொன்று வேரோடு சாய்ந்திருந்தது. அந்த மரத்திலிருந்து ஏராளமான பறவைகள் தங்களது கூட்டை இழந்து தவித்த சம்பவம் இவருக்குள் மிகுந்த பாதிப்பை உருவாக்கியுள்ளது. அன்று முதல் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை எடுத்து, மரங்களை நட்டு வருகிறார்.
மதுரையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மரங்களை நட்டு தினந்தோறும் பராமரித்து வருகிறார். மேலும் திருப்பரங்குன்றம் மலையின் பின்பகுதியில் உள்ள ஆலமரங்களின் விழுதுகள் தரையில் ஊன்ற பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மரம் நடுவதற்கு மழை காலமே ஏற்றது என்பதால் ஆடி மாதங்களில் கடன் வாங்கி கூடுதலாக மரம் நட்டு வருகிறார். இதுமட்டுமின்றி குரங்குகளுக்கும் பறவைகளுக்கும் உணவாக பயன்பெறும் வகையில் உள்ள அத்தி, நாவல் உள்ளிட்ட மரங்களை மலைப்பகுதிகளில் நட்டு வருகிறார்.
இவ்வேளையில் இவரை பாராட்டும்விதமாக 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பசுமை சாம்பியன் விருதையும் ரூ. 1 லட்சம் ரொக்கப் பணமும் கொடுத்து கௌரவித்துள்ளது.
பசுமையை பேணிக் காக்க கடுமையாக உழைத்துவரும் ஏ. துரைராஜ் அவர்கள் பணி சிறந்து மேலும் தொடர மைண்ட் வாய்ஸ் சார்பாக வாழ்த்துக்கள்.