பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்கிறார்கள். இது தவிர ஒவ்வொரு தமிழ் மாதந்தோறும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். அப்போதும் ஏராளமான பக்தர்கள் அங்கு சென்று சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.
சபரிமலை சீசன் காலங்களில் சாமி தரிசனத்துக்கு வரும் பக்தர்களில் சிலர் மாரடைப்பு, மூச்சுத்திணறல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் உயிரிழந்துவிடுகிறார்கள்.
அதுபோன்ற உயிரிழப்புகளை தடுக்க சபரிமலையில் பல இடங்களில் மருத்துவ உதவி மையங்களை கேரள அரசும், தேவசம் போர்டும் அமைத்துள்ளது.
இந்த நிலையில் நடப்பு மண்டல, மகரவிளக்கு சீசன் வருகிற 16-ந் தேதி (கார்த்திகை மாதம் 1-ந் தேதி) தொடங்குகிறது. இதை முன்னிட்டு 15-ந் தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது. அன்றைய தினம் சபரிமலை மற்றும் மாளிகப்புரம் கோவில்களுக்கான புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்றுக்கொள்கிறார்கள். மண்டல பூஜை டிசம்பர் 26-ந் தேதியும், மகரவிளக்கு பூஜை அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14-ந் தேதியும் நடக்கிறது.
இந்த நிலையில் சபரிமலை மண்டல, மகரவிளக்கு சீசன் தொடர்பான ஆலோசனை கூட்டம் முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில், காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. கூட்டத்தில் கேரள தேவஸ்தான துறை மந்திரி வாசவன், வருவாய்த்துறை மந்திரி ராஜன், வனத்துறை மந்திரி சசீந்திரன், உணவு வினியோக துறை மந்திரி ஜி.ஆர்.அனில், மின்வாரிய துறை மந்திரி கிருஷ்ணன் குட்டி, போக்குவரத்து துறை மந்திரி கணேஷ் குமார், சுகாதாரத்துறை மந்திரி வீணா, தலைமை செயலாளர் சாரதா முரளீதரன், திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் மற்றும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்திற்கு பிறகு தேவஸ்தான துறை மந்திரி வாசவன் கோட்டயத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மண்டல மற்றும் மகர விளக்கு சீசனையொட்டிசபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து ஏற்பாடுகளும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 16-ந் தேதிக்கு முன்னதாக ஐயப்ப பக்தர்களுக்கு சபரிமலையில் பிரசாதமாக வழங்கப்படும் அரவணை 40 லட்சம் டின் இருப்பு வைக்கப்படும். இதை முன்னிட்டு அரவணை உற்பத்தி அதிகரிக்கப்பட்டு உள்ளது.
சீசனையொட்டி சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு விபத்து காப்பீடு ரூ.5 லட்சம் வழங்கப்படும். மரணம் அடையும் ஐயப்ப பக்தர்களின் உடல்கள் தேவஸ்தானத்தின் சொந்த செலவில் அவர்களது சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்படும்.
மாத பூஜை நாட்களில் பம்பையில் சிறிய வாகனங்களுக்கு பார்க்கிங் அனுமதி வழங்கியதை போல், தற்போது சீசன் நாட்களிலும் பார்க்கிங் அனுமதி பெற கேரள உயர் நீதிமன்றத்தின் அனுமதி பெறப்படும். நிலக்கல்லில் இந்த ஆண்டு கூடுதலாக 2,500 வாகனங்கள் பார்கிங் செய்ய வசதி செய்யப்பட்டு உள்ளது. அதாவது ஒரே நேரத்தில் 10 ஆயிரம் வாகனங்கள் நிறுத்த வசதிகள் மேம்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் எருமேலியிலும் 2,500 வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்பட்டு உள்ளது.
நிலக்கல்லில் 1,045, பம்பையில் 580 மற்றும் சபரிமலையில் 1,005 கழிப்பிட வசதி செய்யப்பட்டு உள்ளது. சீசனையொட்டி சபரிமலை பாதுகாப்பிற்கு 15 ஆயிரம் போலீசார் 6 கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள். சீசன் நாட்களில் கோட்டயம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை, கோன்னி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, பத்தனம்திட்டை அரசு மருத்துவமனை, ரான்னி அரசு மருத்துவமனை உள்பட சுற்றுவட்டார மருத்துவமனைகள் பக்தர்களுக்காக 24 மணி நேரமும் செயல்படும்.
வருகிற 15-ந் தேதி முதல் கேரள அரசின் சிறப்பு பஸ்கள் பத்தனம்திட்டை, செங்கண்ணூர், கோட்டயம், திருவனந்தபுரம், நிலக்கல், எருமேலி ஆகிய இடங்களில் இருந்து பம்பைக்கு இயக்கப்படும். சபரிமலையில் இந்த ஆண்டு 25 லட்சம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.