இந்தியாவின் முக்கியமான இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான Royal Enfield நிறுவனம் Enfield Hunter 350 மோட்டார் சைக்கிளை கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
அறிமுகம் செய்யப்பட்ட ஆறு மாதங்களிலேயே இந்த பைக் சுமார் 1 லட்சம் யூனிட் விற்பனை என்கிற அசாத்தியான சாதனையை படைத்தது. 2023 பிப்ரவரியில் இந்த சாதனையை எட்டியநிலையில், அடுத்த ஐந்தே மாதங்களில் மீண்டும் 1 லட்சம் பைக்குகள் விற்பனையாகி மேலும் ஒரு சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மிக மிக அமோகமான விற்பனை வரவேற்பை Hunter 350 இந்தியாவில் பெற்றுக் கொண்டிருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
இதற்கு மிக முக்கியமான காரணமே இந்த பைக்கின் மலிவு விலை மற்றும் ஸ்டைலிஷ் ஆன தோற்றம் தான். ரூ. 1.69 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே. இது தான் நிறுவனத்தின் முதல் 17 இன்ச் வீல் கொண்ட மோட்டார் சைக்கிளும் ஆகும். அதேவேளையில், எஞ்ஜின் விஷயத்தில் இந்த பைக் Classic 350 மற்றும் Meteor 350 உடன் ஒத்துப் போகிறது.
இந்த பைக்குகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 350 CC என்ஜின் தான் Hunter 350-யிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது சிங்கிள் சிலிண்டர் டிஓஎச்சி ஃப்யூவல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு என்ஜின் ஆகும். இந்த என்ஜின் அதிகபட்சமாக 20 எச்பி பவரையும், 27 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ஹண்டர்ஸ் மற்றும் ரெட்ரோ ஹண்டர்ஸ் என இரண்டு வேரியண்ட்களில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கிறது.
மெட்ரோ ஹண்டர்ஸ் இளம் தலைமுறையினருக்கு ஏற்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. டூயல் நிறம், காஸ்ட் அலாய் வீல், அகலமான ட்யூப்லெஸ் டயர்கள், ஸ்பிளிட் அலுமினியம் ரியர் கிராப் ரெயில் மற்றும் வட்ட வடிவ ரியர் லைட் ஆகியவை இந்த தேர்வை அலங்கரிக்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆனால், இதன் ரெட்ரோ வெர்ஷன் ஆண்டிக் ஸ்டைலில் இருக்கும். போல்டான ஒற்றை நிறம், ட்யூப்ளர் ரியர் கிராப் ரெயில் மற்றும் ஸ்டைலிஷான ஸ்போக் வீல்கள் எனப் பலதரப்பட்ட அம்சங்கள் அதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
இதுபோன்று தனித்துவமான சிறப்பு வசதிகளை இந்த மோட்டார் சைக்கிள் கொண்டிருப்பதாலும் அதற்கு நல்ல வரவேற்பு இந்தியர்கள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த பைக் இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் சிலவற்றிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இங்கிலாந்து, ஜெர்மன், இத்தாலி, அர்ஜென்டினா, ஜப்பான், கொரியா, தாய்லாந்து, பிரான்ஸ் மற்றும் மெக்ஸிகோ என ஏகப்பட்ட நாடுகளில் இந்த பைக் விற்பனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.