விக்ரமின் நடிப்பிற்கு ஆஸ்கார் விருது கொடுத்தால் கூட குறைவு தான்... தங்கலான் திரைவிமர்சனம்


இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி, இன்று உலகளவில் வெளிவந்துள்ள திரைப்படம் தங்கலான். இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். பெரிதும் எதிர்பார்ப்பில் உருவாகி வெளிவந்துள்ள இப்படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனத்தில் பார்க்கலாம் வாங்க.
கதாநாயகன் தங்கலான் (விக்ரம்) தனது மனைவி, பிள்ளைகள் மற்றும் மக்களுடன் வாழ்ந்து வருகிறார். வெள்ளைக்காரர்களின் அரசாங்கத்தின் கீழ் இருக்கும் மிராசுக்கள், தங்கலானுடைய மக்கள் அனைவரையும் அடிமைபோல் நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையை மாற்றி தனது மக்களை அடுத்தகட்டத்துக்கு அழைத்து செல்லவேண்டும் என நினைக்கிறார் விக்ரம். இந்த நேரத்தில் வெள்ளைக்காரன் Clement மூலம் தங்கம் தேடும் வேலை இவர்களுக்கு வருகிறது.

அதனை செய்வதன் மூலம் தங்களுக்கு அதிகம் சம்பளம் கிடைக்கும், அதன்மூலம் மிராசிடம் இருக்கும் தங்களின் நிலங்களை மீண்டும் வாங்கிவிடலாம் என எண்ணி தனது மக்களை தங்கம் தோண்டும் இடத்திற்கு விக்ரம் அழைத்து செல்கிறார்.
இதன்பின் என்ன நடந்தது? அங்கு அவர்கள் என்னென்ன சவால்களை எல்லாம் சந்தித்தார்கள் என்பது தான் படத்தின் மீதி கதை.
இயக்குநர் பா. ரஞ்சித் உலக தரத்தில் தங்கலான் படத்தை எடுத்துள்ளார். நிலம் பற்றிய அரசியல் குறித்து இப்படம் பேசியுள்ளது. அனைத்து காலகட்டத்திலும் பொருத்தமான அரசியலாக இது இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
ஆனால், திரைக்கதை சற்று குழப்பமாக இருக்கிறது. அதை தெளிவாக கூறி இருக்கலாம். அதுவே படத்தின் மிகப்பெரிய மைனஸ் பாயிண்டாக மாறியுள்ளது. அதே போல் நடிகர், நடிகைகள் பேசும் வசனங்கள் பல இடங்களில் புரியவில்லை.

விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா. Daniel Caltagirone என அனைவரும் நடிப்பில் நூறு சதவீதத்தை கொடுத்துள்ளனர். இதில் குறையே சொல்லமுடியாது. இவர்களுடைய நடிப்பு தான் படத்தின் மிகப்பெரிய பலம். கண்டிப்பாக பல விருதுகள் இவர்களுக்கு காத்திருக்கிறது. இதில் விக்ரமின் நடிப்பிற்கு ஆஸ்கார் விருது கொடுத்தால் கூட குறைவு தான் என்று சொல்லவேண்டும். அந்த அளவிற்கு உயிரை கொடுத்து இப்படத்தில் நடித்துள்ளார்.
கதாநாயகன் விக்ரமை தாண்டி படத்தின் மற்றொரு ஹீரோ என்றால், அது இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தான். படத்தில் எங்கெங்கெல்லாம் தொய்வு ஏற்படுகிறதோ, அங்கெல்லாம் தனது பின்னணி இசையால் மிரட்டிவிட்டார். மேலும் பாடல்களும் பக்காவாக இருக்கிறது.
ஆடை வடிவமைப்பு, கலை இயக்கம் இரண்டுமே நம்மை தங்கலான் உலகத்திற்கு கொண்டு செல்கிறது. ஒளிப்பதிவு இதற்கு மிகமுக்கிய காரணம் ஆகும். எடிட்டிங் நன்றாக இருந்தாலும் புரியும்படி இல்லை.
மொத்தத்தில் தங்கலான் மக்களுக்கானவன்.