உடல்நலக்குறைவால் சென்னை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு டாக்டர்கள் செயற்கை சுவாசம் அளித்து தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அவரது உடல்நலம் குறித்து மு.க.ஸ்டாலின் நேரில் சென்று டாக்டர்களிடம் விசாரித்தார்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் (வயது 75) சளி, காய்ச்சல் மற்றும் மூச்சுவிடுதலில் சிரமம் ஆகியவை காரணமாக கடந்த 11-ந் தேதி சென்னை மணப்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். அவரது நுரையீரலில் தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதால் அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலையில் அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால் உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் அளித்து டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார். மேலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குடும்பத்தாரிடமும் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது குறித்து கேட்டறிந்தார்.
முதல்-அமைச்சருடன் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோரும் உடன் சென்றிருந்தனர். இதேபோன்று, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மாநில துணைத்தலைவர் கோபண்ணா, பொதுச்செயலாளர் ரங்கபாஷியம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வி.ஆர்.சிவராமன், மாநில செயலாளர் ஏ.வி.எம்.ஷெரிப் உள்ளிட்டோர் மருத்துவமனையில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குடும்பத்தாரிடம் அவரது உடல்நிலை குறித்து கேட்டறிந்தனர்.
மக்கள் பணிக்கு திரும்புவார்
பின்னர், செல்வப்பெருந்தகை நிருபர்களிடம் கூறியதாவது:-
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். என்னென்ன மருத்துவ உதவிகள் அளிக்க முடியுமோ அனைத்தையும் மியாட் மருத்துவமனை சிறப்பாக அளித்து வருகிறது. அவர் மீண்டும் உடல்நலம் தேறி வருவார். வருகிற 9-ந்தேதி சட்டமன்றம் கூட இருக்கிறது. சட்டமன்றத்தில் அவரது குரலை கேட்க தமிழ்நாட்டு மக்களும், நாங்களும் ஆவலோடு இருக்கிறோம். மீண்டும் அவர் மக்கள் பணிக்கு திரும்புவார். டாக்டர்கள் நல்ல முறையில் அவரை கவனித்து வருகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.