’H1B விசா’ கால அவகாசத்தை 60ல் இருந்து 180 நாட்களுக்கு நீட்டிப்பு!

வாஷிங்டன், அமெரிக்காவில் உள்ள வேலையிழந்த ‘H1B விசா’தாரர்களுக்கான அவகாசத்தை 60ல் இருந்து 180 நாட்களுக்கு நீட்டிக்க அந்நாட்டு அதிபர் ஆலோசனைக் குழு பரிந்துரைத்துள்ளது. கம்ப்யூட்டர் மென்பொருள் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்கள், அமெரிக்கா சென்று பணியாற்ற, H1B விசாவை அந்நாட்டு குடியேற்றத் துறை வழங்குகிறது. இந்த விசாவை, நம் நாட்டினரும், நம் அண்டை நாடான சீனாவைச் சேர்ந்தவர்களும் தான் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். ஆரம்ப காலத்தில், H1B விசா பெறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், நம் நாட்டினர் உள்ளிட்ட வெளிநாட்டினர் பல்வேறு சிக்கல்களை சந்தித்தனர்.

அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின் கடந்த சில மாதங்களாக, இந்த விசா செயல்பாட்டு முறையை சீரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, அமெரிக்காவில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில், H1B விசா வைத்திருந்த பலர் வேலையிழந்தனர். இவர்கள் அங்கேயே தங்கி இருக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கிய அமெரிக்கா, மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், வேலை இழந்து தவிக்கும் பணியாளர்களின் கால அவகாசத்தை நீட்டிக்க அந்நாட்டு அதிபர் ஆலோசனைக் குழு, குடியேற்றத் துறைக்கு பரிந்துரைத்துள்ளது. இது குறித்து, ஆலோசனைக் குழு உறுப்பினர்

அஜய் ஜெயின் புட்டோரியா கூறியுள்ளதாவது:

தற்போது வழங்கப்படும் 60 நாட்கள் அவகாசம் என்பது H1B விசா வைத்துள்ளவர்களுக்கு போதாது. புதிய வேலையில் சேருவதற்கான பல கட்ட நேர்க்காணல்களை சந்திக்க குறைந்தது ஒரு மாத அவகாசம் தேவைப்படுகிறது. விசா பெறுவதற்கான நடைமுறையில் காலதாமதம் ஆவதால், இவர்கள் நாட்டைவிட்டே செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், திறமையான ஊழியர்களை நம் நாடு இழக்க நேரிடும். பொருளாதார நெருக்கடியை நினைவில் வைத்து திறமையான பணியாளர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம். ஆகையால், வேலை இழந்த H1B விசாதாரர்களுக்கான கால அவகாசத்தை 180 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.