அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளும் பதிவு செய்யவில்லை என்றால், அவர்களுக்கு பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி கிடைக்காது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் மத்திய அரசு, இதற்காக ஒரு செயலியையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளின் தகவல்களை வேளாண்மைத் துறை அதிகாரிகள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த அக்ரிஸ்டாக் திட்டத்தின் கீழ் அனைத்து விவசாயிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். அத்துடன், விவசாயிகளின் இ-கேஒய்சி பதிவு செய்யப்படும். இதை செய்தால் மட்டுமே விவசாயிகளுக்கு பிரதமர் கிசான் சம்மன் நிதி கிடைக்கும்.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 4 லட்சத்து 60 ஆயிரம் விவசாயிகள் பதிவு செய்துள்ள நிலையில், இதற்கான காலக்கெடுவையும் இந்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதாவது, ஜூலை 1 முதல் ஜூலை 31 வரை அக்ரிஸ்டாக் திட்டத்தில் பதிவு நடைபெறும். அதில் பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே, கிசான் சம்மன் நிதி தவணைத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
ஜூலை 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய தவறியவர்கள் டிசம்பர் 1ஆம் தேதி முதல் செல்போன் செயலியில் உள்ள பொது வசதி மையத்திற்கு சென்று கேட்கப்பட்டுள்ள விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். அதாவது, விவசாயியின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண், செல்போன் எண், ஆதார் எண், இ-கேஒய்சி போன்ற தகவல்களை உள்ளிட வேண்டும்.
பிஎம் கிசான் உதவித்தொகை உயர்வு? எவ்வளவு தெரியுமா?
அக்ரிஸ்டாக் திட்டத்தில் பதிவு செய்வதன் மூலம் பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் தவணைத் தொகை வழங்கப்படும். அத்துடன், அரசின் பலத் திட்டங்களின் பயன்களையும் எளிதாக அடைய முடியும். மேலும், பயிர்க்கடன், கிசான் கிரெடிட் கார்டு, விவசாயம், உட்கட்டமைப்பு நிதி போன்றவற்றுக்கும் இந்த பதிவுகள் உதவும்.