FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் SCAM- சைபர் கிரைம் போலீஸ் எச்சரிக்கை

சமீப நாட்களாக FedEx கொரியர், எஸ்பிஐ வங்கி பெயரில் பணம் பறிக்கும் கும்பல் ஒன்று தீவிரமாக செயல்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தொழில்நுட்பங்கள் வளர.. வளர உலகமே உள்ளங்கைக்குள் சுருங்கி வருகிறது. ஆனால், இதே டெக்னாலஜியை பயன்படுத்தி சிலர் மோசடி செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பல விதங்களாக நடத்தப்படும் இந்த மோசடிகள் தற்போது புதிய வடிவத்தை எட்டியிருக்கிறது. அதாவது, FedEx கொரியர், எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாக அணுகி, வங்கி கணக்கு எண் உள்ளிட்ட விவரங்களை கேட்டு.. அதன் மூலம் மோசடியை அரங்கேற்றுகின்றனர்.

இது குறித்து திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் ரூபேஷ் குமார் மீனா, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையை கொடுத்திருக்கிறார். இதுபோன்ற மோசடி கும்பல்கள் எப்படி செயல்படுகிறது என்பதை விளக்கியுள்ளார்.

அதாவது இந்த கும்பல்கள் யாரை குறி வைக்கின்றதோ, அவர்களின் ஆதார் எண்ணை முதலில் சேமித்து வைத்திருக்கும். FedEx Courierலிருந்து போன் செய்கிறோம் என்று உரையாடல் தொடங்கும். FedEx என்பது சர்வதேச அளவில் உள்ள ஒரு கொரியர் கம்பெனி. இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கும் பார்சல் சேவையை இந்த நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் மும்பை கிளையிலிருந்த பேசுகிறோம் என அடையாளம் தெரியாத நபர் போன் செய்து பேசினார் உஷாரக இருக்கவும்.

உங்கள் பெயரில் FedEx Courier மூலம் பார்சல் அனுப்பப்பட்டிருக்கிறது என்றும், அந்த பார்சலில் சட்டவிரோதமான பொருட்கள் இருப்பதாகவும் கூறுவார்கள். இதனை உறுதி செய்ய உங்கள் ஆதார் எண்ணை கூறுவார்கள். தற்போது இந்த பார்சல் சுங்கத்துறையில் சிக்கி உள்ளதாகவும், அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் கூறுவார்கள். புகாரின் அடிப்படையில் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது, உங்களை வீட்டு காவலில் வைத்திருக்கிறார்கள் என்றும் கூறுவார்கள்.

நீங்கள் இதனை நம்பவில்லை என்று சொன்னால்.. உடனடியாக சில டாக்குமென்ட்கள் உங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதில் மும்பை காவல்துறை என்று குறிப்பிட்டிருக்கும். இது போலியான FIR. இதில் உங்கள் பெயரும் இடம் பெற்றிருக்கும். எனவே இதனை உண்மை என நம்பி பயந்துவிட்டால்.. இதிலிருந்து உங்களை காப்பாற்றுவதாக கூறி பணம் கறக்க தொடங்குவார்கள். அதாவது உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணத்தை, அவர்கள் கூறும் வங்கி கணக்குக்கு மாற்ற சொல்வார்கள். அப்படி மாற்றினால், சரிபார்ப்பு முடிந்தவுடன் திருப்பி அனுப்புவதாக கூறுவார்கள்.

இதை நம்பி பணம் அனுப்பினால் மொத்தமாக போய்விடும். திரும்ப ஒரு பைசா கூட கிடைக்காது. மட்டுமல்லாது மீண்டும் அவர்களை தொடர்புகொள்ளவும் முடியாது. இந்த மோசடி ஸ்கைப் வீடியோ கால் மூலம் நடக்கும் என்று ரூபேஷ் குமார் மீனா கூறியுள்ளார்.

அதேபோல எஸ்பிஐ வங்கியில் இருந்து பேசுவதாகவும் சில அழைப்புகள் வரும். இவர்கள் உங்களுக்கு பரிசு விழுந்திருப்பதாகவும், அது விரைவில் காலாவதியாக போவதாகவும் உங்களை அவசர படுத்துவார்கள். பெரும்பாலும் வாட்ஸ்அப் மூலமாகவே தொடர்பு கொள்வார்கள். வாட்ஸ்அப் குழு ஒன்றில் உங்களை இணைப்பார்கள். அந்த குழுவின் பெயர் மற்றும் புரொஃபைல் படம் எல்லாம் எஸ்பிஐ என்றே இருக்கும்.

உங்களிடம், வங்கி கணக்கை புதுப்பிக்க வேண்டும் என்று கூறுவார்கள். நீங்கள் இதனை நம்பி அனைத்து விவரங்களையும் கொடுத்தால், அடுத்த நொடி வங்கி கணக்கிலிருந்து பணம் மொத்தமாக சுருட்டப்படும். மட்டுமல்லாது மீண்டும் அவர்களை தொடர்பு கொள்ள முடியாதவாறு தலைமறைவாகி விடுவார்கள்.

இப்படி சந்தேகப்படும்படி அழைப்பு வந்தால் உடனடியாக, சைபர் குற்ற தொலைபேசி உதவி எண் 1930 க்கு உடனடியாக அழைக்கவும். அல்லது
www.cybercrime.gov.in
-ல் புகார் தெரிவிக்கவும் என்று ரூபேஷ் குமார் மீனா தெரிவித்திருக்கிறார்.