சென்னை: தொழில்நுட்ப வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது. இதில் முக்கியமானது என்னவென்றால் பல IT தொழிநுட்ப நிறுவனங்களும் அதற்கு ஏற்ப, தங்களை மாற்றிக் கொண்டு வருகின்றன.
ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) உலகை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். IT நிறுவனங்களில் தற்போது பல வேலைகளும் AI மூலம் செய்யப்படுகின்றன. ஆனால் AI எவ்வளவு திறமையானதாக இருந்தாலும் சில வேலைகளை AI வைத்து செய்ய முடியாது. இந்த 2024 ஆம் ஆண்டில் AI வளர்ச்சி அடைந்தாலும், மனிதர்களால் மட்டுமே செய்ய முடியுமென்ற வேலைகளைப் பற்றி பார்ப்போம்.ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) வளர்ச்சி மிகப்பெரிய அளவில் இருக்கிறது.
இதனால் ஒரு குறிப்பிட்ட ஆண்டுக்குப் பிறகு IT துறையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதன் விளைவாக தற்போதும், பல பணி நீக்கங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. AI மனிதர்களின் வேலையை எளிதாக்குகிறது என்பதால் பல முன்னணி IT நிறுவனங்களும் AI செயல்பாட்டை அதிகரிக்கின்றன. இது வேலைக்கு எடுக்கும் நேரத்தை குறைப்பதோடு, பல நிறுவனங்களுக்குப் பணத்தைச் சேமிக்கவும் உதவுகிறது.இது போன்ற வளர்ச்சி காரணமாக பலருக்கும் எழும் கேள்வி என்னவென்றால், எந்த துறையில் நாம் நீண்ட நாள் பயணிக்க முடியும் என்பதுதான்..
உங்களுக்கான விடையைப் பார்க்கலாம். என்னதான் AI வந்தாலும் மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய சில வேலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.மருத்துவர்கள்: எந்த AI வந்தாலும் மனிதர்களுக்கு இருக்கும் மனிதாபிமானத்தை கொண்டு வர முடியுமா.. என்றால் அதற்கான சாத்தியக்கூறுகள் சற்று கம்மிதான். இதனால் மருத்துவ துறை AI வளர்ச்சி அடைந்தாலும், அழியாத ஒரு தொழிலாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு நோயாளியின் உணர்வுகளைப் புரிந்து அவர்களுக்கு தேவைப்படும் சிகிச்சை அளிப்பது மனித மருத்துவரால் மட்டுமே சாத்தியம்.நீங்கள் கேட்கலாம்.. தற்போது அதிக அறுவை சிகிச்சைகளை ரோபோக்கள் செய்கிறதே.. என்று. ஆம்..
ஆனால் அந்த ரோபோக்களை இயக்கவும் மனிதர்கள் தேவைப்படுகின்றனர். ஒரு சிறிய அளவிலான தவறு அறுவை சிகிச்சையின் போது நடந்து விட்டால் கூட, ஒரு நபரின் உயிருக்கு ஆபத்தாக மாறலாம். இதை எல்லாம் உணர்ந்து தெரிந்த ஒரு மருத்துவரால் மட்டுமே ஒரு உயிரைக் காப்பாற்ற முடியும்.நிதி ஆலோசகர்கள்: பொருளாதார நிலை மற்றும் ஒருவரின் எதிர்கால கனவுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பான முதலீட்டு ஆலோசனைகளை வழங்கும் நிதி ஆலோசகர்களுக்கு என்றுமே மவுசு குறையாது. துல்லியமான நிதி ஆலோசனைகளை வழங்குவதற்கு மனிதர்களால் மட்டுமே முடியும்.இசைக் கலைஞர்கள்: AI ரோபோட் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டாலும், மனிதர்களின் மனங்களை புரிந்து அதற்கேற்ப பாட்டு பாடுவதற்கானாலும் சரி..
பாடல் எழுதுவதற்கானாலும் சரி, ரசிக்கும் திறன் கொண்ட மனிதர்களுக்கு மட்டுமே உரித்தான ஒன்று. இதனை ரோபோக்கள் வைத்த செய்தால், அவ்வளவு இனிமையாக இருக்குமா என்பது கேள்வி குறிதான்.தொழிலதிபர்கள்: சொந்த தொழில் செய்வது தான் இன்றைய ட்ரெண்ட். பூஜ்ஜியத்தில் இருந்து கோடிகளில் சம்பாதித்த பலரின் கதைகளைக் கேட்டிருப்போம். அவர்கள் எல்லோரும் தாங்களாக முன்வந்து தான், தங்களுடைய பிராண்டாக ஆனாலும் அல்லது வேறு ஏதேனும் தொழிலாக இருந்தாலும், அவற்றை நடத்தி வென்று காட்டியுள்ளனர்.
இதனை ஒரு AI தொழில்நுட்பத்தை வைத்து செய்ய முடியாது. கண்டிப்பாக சுயதொழிலில் மனிதர்களின் பங்கு இன்றியமையாததாக உள்ளது.நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள்: நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் சட்ட திட்டங்களை நன்கு அறிந்தவர்கள் மற்றும் மனித உரிமைகள் பற்றிய புரிதல் கொண்ட நபர்கள். ஒவ்வொரு வழக்கையும் ஆழ்ந்து சிந்தித்து அதற்கு ஏற்ப தீர்வுகளை வழங்கும் வல்லமை மனிதர்களுக்கே உரியதாக உள்ளது. இது போன்ற விஷயங்களுக்கு AI பயன்படுத்துவது அவ்வளவு சிறப்பானதாக இருக்காது.சமூகப் பணியாளர்கள்: இந்த சேவைகளில் மனித தொடர்பு, சிக்கலான சமூக பிரச்சினைகளை புரிந்து கொள்வது மற்றும் நம்பிக்கையை வளர்ப்பது போன்ற காரணிகளைக் கருத்தில் கொண்டால்..
அது மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய வேலையாக இருக்கிறது. எந்திரன் படத்தில் நாம் பார்த்திருப்போம் அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகளை வழங்குவதற்காக நடிகர் ரஜினிகாந்த் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார். இதுபோன்ற விஷயங்கள் படத்தில் மட்டுமே சாத்தியம்.AI எவ்வளவு மேம்பட்டதாக இருந்தாலும், சில வேலைகளை மனிதர்கள் மட்டுமே செய்ய முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.