கடந்த இரண்டு நாட்களாக சோசியல் மீடியா எங்கும், சொமேட்டோவில் வேலை செய்து, அரசு வேலை கிடைத்த விக்னேஷ் பற்றிய செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மும்பையில் போஸ்டிங் கிடைத்து, அங்கு வேலை செய்துகொண்டிருக்கும் விக்னேஷைத் தொடர்பு கொண்டு பேசினோம். “எனக்கு மார்ச் மாசத்துலயே வேலை கிடைச்சு இங்க மும்பைக்கு வந்துட்டேன். என் சொந்த ஊர் தர்மபுரி. ப்ளஸ் டு -ல நல்ல மார்க் வாங்கினதால, சென்னையில பொறியியல் படிக்கும் வாய்ப்பு கிடைச்சது.
மூன்றாமாண்டு படிச்சுட்டு இருக்கும்போது பேங்கிங் துறையில ஆர்வம் உருவாச்சு. அது சார்ந்த போட்டித் தேர்வுகளுக்கு எல்லாம் நேரம் கிடைக்கும் போது படிப்பேன். ஆனா. கல்லூரி இறுதி ஆண்டுல, கேம்பஸ் இண்டர்வியூ நடத்தினாங்க. எனக்கு ஒரு கோர் கம்பெனியில வேலையும் கிடைச்சது. வீட்ல, எல்லாரும், கையில இருக்க வேலைய விட்டுறாதன்னு சொன்னாங்க. அதனால, அவங்களுக்காக என்னோட பேங்கிங் கனவுகள எல்லாம் மூட்டைகட்டி வெச்சிட்டு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன்.
சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து, என்னோட அப்பா கடையில வேலை பார்த்துட்டு இருந்தப்போ அவருக்கு மாரடைப்பு வந்துடுச்சு. மருத்துவமனையில கொண்டு போய் சேர்த்தோம். செலவு ரொம்ப அதிகமாகும்னு தெரிஞ்சுது. உடனே நான் என் நிறுவனத்துக்கிட்ட பேசி, ஈஎஸ்ஐ மூலமா பணம் எடுத்து அப்பாவுக்கு உதவ நெனச்சேன். ஆனா, எனக்கு எதேதோ காரணம் காட்டி பணத்தை எடுக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க. நான் இவ்ளோ சம்பாதிச்சும், அவசர தேவைக்கு கூட என் வேலையும் சம்பளமும் பயன்படலையேன்னு ரொம்ப வருத்தமாகிடுச்சு. அப்பாவ எப்படியோ காப்பாத்தி வீட்டுக்கு கூட்டிட்டு வந்தோம். ஆனா என் மனசுல இருந்த கோபமும் வேதனையும் மட்டும் குறையல.
என்னால திரும்பவும் அந்த நிறுவனத்துல போய் வேலை செய்ய முடியல. வேலைய விட்டு நின்னுட்டேன். அடுத்து மீண்டும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக ஆரம்பிச்சேன். சென்னையில வெராண்டா ரேஸ் பயிற்சி மையத்துல (Veranda Race coaching institute) சேர்ந்து படிச்சேன். என் கூட படிச்ச பலர் வேலை கிடைச்சு போய்ட்டாங்க. ஆனா எனக்கு மட்டும் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு சிறிய காரணத்துக்காக வெற்றி கிடைக்காம தள்ளிப்போய்டே இருந்துச்சு.
அப்படியே மூணு வருஷம் ஓடிடுச்சு. வீட்ல எல்லாரும், ஏன் இவ்ளோ கஷ்டப்பட்டு படிக்குற, வேற ஏதாவது வேலைக்கு போன்னு நிறைய தடவ சொன்னாங்க. ஆனா நான் என் முடிவுல ரொம்பத் தெளிவா இருந்தேன். ஆனா, கையில இருக்குற பணம் காலியாகும் போதெல்லாம், அப்பா கிட்ட காசு கேக்க ஒரு மாதிரி இருக்கும். அதனால நடுவுல சொமேட்டோல சேர்ந்து டெலிவரி வேலை செய்ய ஆரம்பிச்சேன்.
காலையில எழுந்து படிச்சிட்டு மதியம் தூக்கம் வர சமயம் சொமேட்டோ உணவு டெலிவரி செய்ய போய்டுவேன். மறுபடியும் வந்து படிச்சிட்டு, ராத்திரி டெலிவரிக்கு போய்டுவேன். எந்நேரமும் ரூமுக்குள்ள படிச்சுட்டு இருக்கும் போது, நடுவுல இந்த மாதிரி வெளிய போய்ட்டு வரும் போது நல்லா இருக்கும். அதே நேரம் என்ன நானே பார்த்துக்க தேவையான பணத்தையும் சம்பாதிக்க முடிஞ்சது.
இந்த மாதிரி அரசு வேலையில் சேரணும்னு படிக்கிற எல்லாரும் வெற்றிக்கு ரொம்ப கிட்ட வந்துட்டு அதுக்கு மேல படிக்க முடியாதுன்னு விட்டுட்டுப் போய்டுவாங்க. குடும்ப சூழ்நிலை மற்றும் பொருளாதார நிலைனால அவங்க கனவை அப்படியே கைவிட்டுட்டு, கிடைக்கும் வேலைக்குப் போய்டுவாங்க. ஆனா நான் இதுவரைக்கும் 20 தேர்வுகள் எழுதியிருக்கேன். ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தாலே வேலை கிடைக்காமல் தட்டிக் கழிச்சுட்டு இருக்கும். பல சமயம், இனி இந்த அரசு வேலையே வேணாம்னு நினைச்சாலும், அந்த மாதிரியான எண்ணங்களைக் கைவிட்டு தேர்வுக்குத் தயாராவேன்.
நியூ இந்தியா அஷ்யுரன்ஸ், மத்திய அரசுப் பணியில 300 இடங்கள் காலியா இருப்பதா அறிவிப்பு வெளியாச்சு. எல்லோரும் இவ்ளோ குறைவான காலியிடங்களா என்று தயங்கினாங்க. ஆனா, நான் அந்த முன்னூறு பேர்ல ஒருத்தனா இருக்கணும்னு நினைச்சு அந்தத் தேர்வுக்கு படிக்க ஆரம்பிச்சேன். பேங்கிங் துறைக்கான அதே பாடங்கள்தான் இந்தத் தேர்வுலயும் இருக்கும். வேலை கிடைக்கும்னு பெரிய நம்பிக்கை எதுவும் இல்ல. ஆனா, ஒவ்வொரு படியா எப்படியோ முன்னேறி கடைசியா மும்பையில நிர்வாக அதிகாரியா பணி கிடைச்சது. குடும்பம், நண்பர்கள் எல்லாருக்கும் ரொம்ப சந்தோஷம். அம்மா அப்பா கனவ நிறைவேத்திட்டேன். இப்போ மும்பையில போஸ்டிங். நிம்மதியா வேலை பார்த்துட்டு வறேன்” என்றார்.