சென்னையில் மீண்டும் வருகிறது ஃபோர்டு கார் நிறுவனம்... பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதி...

உலகின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான அமெரிக்காவை சேர்ந்த போர்டு, சென்னையை அடுத்த மறைமலைநகரில் 1996-ம் ஆண்டு தனது தொழிற்சாலையை தொடங்கியது.

இதன் மூலம் ஆண்டுக்கு 2½ லட்சம் கார் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டன.

போர்டு நிறுவனத்தின் மற்றொரு தொழிற்சாலை குஜராத் மாநிலம் சனந்த் பகுதியில் இருந்தது. 2 இடங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் போர்டு கார்கள் 32 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு (2021-ம் ஆண்டு) இந்தியாவில் கார் உற்பத்தியை போர்டு நிறுவனம் நிறுத்திக்கொண்டது.

அதன்பிறகு, குஜராத் மாநிலத்தில் போர்டு தொழிற்சாலை இயங்கிய இடம் டாடா நிறுவனத்திடம் விற்பனை செய்யப்பட்டது. சென்னை மறைமலைநகரில் 360 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இன்னொரு தொழிற்சாலை போர்டு நிறுவனத்தின் வசமே இருந்தது. அந்த இடம் விற்பனை செய்யப்படவில்லை.

இந்த நிலையில், அமெரிக்கா சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கடந்த 10-ந் தேதி சிகாகோவில் போர்டு நிறுவனம் மற்றும் ஐடிசர்வ் கூட்டமைப்பின் உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினார். அப்போது, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.


இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் மீண்டும் போர்டு தொழிற்சாலையை தொடங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. அண்மை காலமாக மேற்கத்திய நாடுகளில் போர்டு நிறுவன கார்களின் விற்பனை கணிசமான அளவு குறைந்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் மீண்டும் கார் உற்பத்தி ஆலையை திறக்கலாமா? என்று போர்டு நிறுவனம் யோசித்துக்கொண்டிருந்தது.

இந்த நேரத்தில்தான், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், போர்டு நிறுவன அதிகாரிகளை சந்தித்து அழைப்பு விடுத்தார். அதன்படி, சென்னை மறைமலை நகரில் உள்ள போர்டு ஆலை மீண்டும் திறக்கப்பட இருப்பதாக நேற்று அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொழிற்சாலையை மீண்டும் திறப்பதற்கான ஆயத்தப்பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இங்கு, மின்சார கார்களை தயாரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. மேலும், இங்கிருந்து மின்சார கார்களை பல நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் முடிவு செய்துள்ளது.

இந்நிறுவனம் தமிழகத்தில் மீண்டும் அமைவதன் மூலம் 12 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அடுத்த 3 ஆண்டுகளில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்ய போர்டு நிறுவனம் திட்டமிட்டிருப்பதன் மூலம் மேலும் 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

ஒருங்கிணைந்த வாடிக்கையாளர் உதவி மையம் மூலம் 10 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து சேவையாற்ற முடியும் என்றும் அந்நிறுவனம் நம்புகிறது.

இதுகுறித்து, போர்டு குழுமத்தின் தலைவர் கே ஹேட், ‘சென்னை தொழிற்சாலையை பல்வேறு வசதி, வாய்ப்புகள் மூலம், மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு தமிழக அரசு உதவி செய்ததற்காக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நடவடிக்கையின் மூலம், தமிழ்நாட்டில் இருந்து உற்பத்தியை தொடங்கி புதிய சர்வதேச சந்தைக்கு சேவையாற்ற உறுதிபூண்டிருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.