கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி காலமானார்!

கேரளா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான உம்மன் சாண்டி பெங்களூர் மருத்துவமனையில் இன்று அதிகாலையில் காலமானார். அவருக்கு வயது 79. எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த இவர் 9 முறை எம்எல்ஏவாக தேர்வான நிலையில் கேரளா முதல்வராக 2 முறை செயல்பட்டார்.

கேரளாவை சேர்ந்தவர் உம்மன் சாண்டி. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த இவர் கேரளாவில் 2 முறை முதல்வராக இருந்தார். இந்நிலையில் தான் தொண்டை சார்ந்த பிரச்சனையில் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். இதற்கு அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உம்மன் சாண்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அவர் காலமானார். இன்று அதிகாலை 4.30 மணியளவில் அவரது உயிர் மருத்துவமனையில் பிரிந்தது.

உம்மன் சாண்டி காலமானதை அவரது மகன் சாண்டி உம்மன் உறுதி செய்துள்ளார். இதுபற்றி அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் “அப்பா காலமாகி உள்ளார்’” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

யார் இந்த உம்மன் சாண்டி?

உம்மன் சாண்டி கேரளா மாநிலம் குமாரகோம் பகுதியில் 1943ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி பிறந்தார்.
இவரது தந்தை பெயர் கோ சாண்டி. தாய் பெயர் பேபி சாண்டி. உம்மன் சாண்டியின் மனைவி பெயர் மாரியம்மா உம்மன். இவர் வங்கியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். உம்மன் சாண்டிக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். இவர் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர்.

உம்மன் சாண்டி சட்டப்படிப்பை முடித்திருந்தார். கல்லூரி காலத்திலேயே அரசியலில் தீவிரம் காட்டினார். காங்கிரஸ் கட்சியின் இளைஞர் பிரிவு தவைராக 1970 ல் செயல்பட தொடங்கினார். அதன்பிறகு அதே ஆண்டில் முதல் முறையாக புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் 1977, 1980, 1982, 1996, 2001, 2006, 2011, 2016, 2021ம் ஆண்டு என 9 முறை வெற்றி பெற்றார்.

இவர் கேரளாவின் 10 வது முதல்வராக செயல்பட்டார். கடந்த 2004 முதல் 2006ம் ஆண்டு வரை முதல் முதலாக முதல்வரானார். அதன்பிறகு 2021 முதல் 2016 வரை 2வது முறையாக கேரளா முதல்வரானார். இதற்கிடையே 2006ம் ஆண்டு முதல் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டார்.

கேரளாவை பொறுத்தமட்டில் உம்மன் சாண்டி எதிர்க்கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தார். தற்போதும் அவர் புதுப்பள்ளி தொகுதி எம்எல்ஏவாக தொடர்ந்து வந்த நிலையில் காலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.