உங்களுக்கு வந்த பார்சலில் போதைப்பொருள் இருந்ததாக மிரட்டி, ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் பணம் பறிக்கப்படுவதாகவும், அதுகுறித்து உஷாராக இருக்கும்படியும் மத்திய அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய அமைப்பான இந்திய இணைய குற்ற ஒருங்கிணைப்பு மையம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு விளம்பரம் வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சமீபகாலமாக இணைய குற்றவாளிகள் ‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் பொதுமக்களை மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள்.
அவர்கள் யாராவது ஒரு தனிநபருக்கு வாட்ஸ் அப் அல்லது ஸ்கைப் சமூக வலைத்தளங்கள் மூலமாக வீடியோ கால் அல்லது குறுஞ்செய்தி அனுப்பி தொடர்பு கொள்கிறார்கள்.
தாங்கள் போலீஸ் துறையில் இருந்து பேசுவதாகவும், உங்களுக்கு வந்த பார்சலில் போதைப்பொருள் இருந்ததால் அதை கைப்பற்றி இருப்பதாகவும் சொல்வார்கள். சில நேரங்களில், அந்நபரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர் மாட்டிக்கொண்டதாக சொல்வார்கள்.
அந்த நபரின் செல்போன் கேமராவை ‘ஆன்’ செய்ய சொல்வார்கள். இதன்மூலம் அந்த நபர் ‘டிஜிட்டல் கைது’ செய்யப்பட்டதாக அர்த்தமாம். வழக்கில் இருந்து அந்த நபரையோ அல்லது அவருடைய குடும்ப உறுப்பினரையோ விடுவிக்க வேண்டுமானால், ஆன்லைன் பரிமாற்றம் மூலம் தங்களுக்கு பணத்தை பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறார்கள்.
அதற்கு பயந்து பணத்தை பரிமாற்றம் செய்தால், நீங்கள் ஏமாந்து விடுவீர்கள். ஏனென்றால் இது ஒரு மோசடி. அவர்கள் போலீஸ் துறை அல்ல.
சி.பி.ஐ., அமலாக்கத்துறை, சுங்கத்துறை, போலீஸ், நீதிபதிகள் என யாருமே வீடியோ கால் மூலம் கைது செய்வது இல்லை. எனவே, பீதியடைய வேண்டாம். உஷாராக இருங்கள். அந்த குற்றம் குறித்து ‘1930’ என்ற மத்திய உதவி மைய எண்ணுக்கோ அல்லது சைபர் கிரைம் தொடர்பான இணையதளத்திலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.