ஏன் பள்ளிக்கு செல்வதில்லை? இன்று முதல் கணக்கெடுப்பு ஆரம்பம்

சென்னை : மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டத்தில், 5 வயது முடிவடைந்த அனைவருக்கும், 14 வயது வரை இலவச கட்டாய கல்வி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக, ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின் கீழ், மாநிலங்களுக்கு நிதியுதவி அளித்து வருகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, வீட்டில் இருக்கும் பள்ளிக்கு செல்லா குழந்தைகளை கணக்கெடுப்பதோடு, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, இன்று தொடங்கும் தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, கணக்கெடுக்கும் பணி அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில், முதன்மை கல்வி அலுவலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், அரசு பள்ளி ஆசிரியர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், தொழிலாளர் நலத்துறை, வருவாய்த்துறை மற்றும் சமூக நலத்துறையினரின் ஒருங்கிணைப்புடன், ஜனவரி 11ந் தேதி வரை நடக்க உள்ளது.

பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து, அவர்கள் ஏன் பள்ளிக்கு செல்லவில்லை என்பதற்கான காரணத்தை பதிவு செய்வதோடு, அவர்களை அருகில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் சேர்க்கவும், இதுகுறித்து பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு, உளவியல் கவுன்சிலிங் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.