Free Enrollment Now Open! Apply to Top Private Schools 

தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களும் படிப்பதற்கு வழி செய்து தரும் வகையில் இலவச கட்டாய கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 2013ஆம் ஆண்டு இந்த சட்டம் அமலானது. இச்சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் ஏழை குழந்தைகள் சேர்க்கப்படுவார்கள். எல்கேஜி அல்லது 1ஆம் வகுப்பில் சேர்பவர்கள் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தாமல் இலவசமாக படிக்க முடியும். இதன்படி, எல்கேஜி வகுப்பிற்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2020 முதல் 31.07.2021 தேதிக்குள்ளும், ஒன்றாம் வகுப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் 01.08.2018 முதல் 31.07.2019 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும்.

இவ்வாறு விண்ணப்பம் செய்யப்பட்ட விண்ணப்பங்கள், மே 25ஆம் தேதி மாலை 6 மணிக்குள் பரிசீலனை செய்யப்படும்.இருப்பினும், இட ஒதுக்கீட்டிற்கும் மேலாக மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வரப்பெற்று இருந்தால், மே 28ஆம் தேதி குலுக்கல் முறையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். இதன்படி, இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் உள்ள இட ஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை கிடைத்தோர் மற்றும் காத்திருப்பு பட்டியல் உள்ளவர்களின் பெயர்கள், மே 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், மாணவர் சேர்க்கைக்கு தேர்வான குழந்தைகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தகவல் அனுப்பப்படும்.

மேலும், இந்த மாணவர் சேர்க்கைக்குத் தேவையான ஏற்பாடுகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம், வட்டாரக் கல்வி அலுவலகம் மற்றும் வட்டார வள மைய அலுவலகங்கள் செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்டிஇ திட்டத்தின்கீழ் சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ, சிபிஎஸ்இ பள்ளிகளிலும் இலவச மாணவர் சேர்க்கை பெறமுடியும்.

யார் யார் இதன் மூலம் பயன்பெற முடியும்?

வாய்ப்பு மறுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் ஆகியோர் இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் ஆதரவற்றவர், எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர், மூன்றாம் பாலினத்தவர், மாற்றுத் திறனாளி, துப்புரவு தொழிலாளர் ஆகியோரது குழந்தைகளின் விண்ணப்பங்கள் குலுக்கல் நடத்தாமல் முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்யப்படும். அதேபோல, நலிந்த பிரிவினரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு குறைவாக இருக்க வேண்டும்.

ஆர்டிஇ மூலம் இலவச மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

rte.tnschools.gov.in எனும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு பெற்றோர் அதிகபட்சம் தங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள 5 பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம். வருமானம், இருப்பிடம், சாதி சான்றிதழ்களை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளியில் நிர்ணயித்த இடங்களைவிட அதிக விண்ணப்பங்கள் வந்தால், வெளிப்படையான குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.