ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு குறித்த முக்கிய தகவல் ஒன்றை தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேய்க்கால் புறம்போக்கு நிலங்கள் என்பது, கிராமங்களில் ஆடு, மாடுகள் மேய்ச்சலுக்கென்றே ஒதுக்கப்பட்ட பிரத்யேகமான இடங்களாகும்.. இதனால் கால்நடை வளர்ப்பவர்கள் பராமரித்து கொள்ளலாம் என்ற நோக்கத்தில் அரசாங்கம் சார்பில் செய்லபட்டு வருபவை.
ஆனால், நாளடைவில் மேய்ப்பதற்கு பயன்படுத்தப்படாமல், தனிப்பட்ட முறையில் இந்த இடங்களை பொதுமக்கள் சிலர் உபயோகித்து கொள்வதாகவும், அந்த இடங்களில் வீடுகள், கடைகளை கட்டி மக்கள் பயன்படுத்தி கொள்வதாகவும் கடந்த 2015-ல் ஹைகோர்ட் கூறியிருந்தது. அதுமட்டுமல்ல, கடந்த 2021வரை கிட்டத்தட்ட 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் மேய்க்கால் நிலங்களில் வசித்துள்ளதும் உறுதி செய்யப்பட்டது.
ஹைகோர்ட்: ஆனால், அதற்கு பிறகும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடத்தினை காலி செய்யாமல் பயன்படுத்தி வருவதால், ஏற்கனவே அந்த இடத்திற்கு அவர்கள் பட்டா வாங்கியிருந்தாலும், அதனை ரத்து செய்ய வேண்டும் என்று ஹைகோர்ட் தெரிவித்திருந்தது. அந்த இடங்களில் வசிப்போருக்கு மற்றொரு வீடு தந்தால், அம்மக்கள் சம்பந்தப்பட்ட இடத்தினை காலி செய்து கொள்வார்கள் என்றும் அடுத்த கோரிக்கை நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.. மொத்தத்தில், மேய்க்கால் இடங்கள் ஆட்சேபனை உள்ள புறம்போக்கு நிலங்கள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களாகவே உள்ளன.
முக்கிய கேள்வி: இந்நிலையில், சட்டசபையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் திருப்போரூர் எம்எல்ஏ எஸ்எஸ் பாலாஜி, ஏழை எளிய மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு நிறுத்தப்பட்டு உள்ளது.. வரும் மார்ச் மாதத்திற்குள் முதல்வர் ஸ்டாலின் இதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இதற்கு பதிலளித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேசும்போது, “மேய்க்கால் புறம்போக்கு நிலம் தொடர்பாகவும், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு வழங்குவது குறித்தும், ஏற்கனவே முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
அதிகாரிகளுடனும் கலந்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும் காரணத்தால் இதனை உடனடியாக செயல்படுத்த முடியவில்லை. அரசு அதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது” என்று தெரிவித்தார். அந்தவகையில், ஏழை எளிய மக்களுக்கு வீட்டு மனை பட்டா, மின்சார இணைப்பு விரைவில் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.